நகைக் கடைகளில் போலி நகைகளை அடகு வைத்து பணம் பறித்த வழக்கில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனின் தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதன் மூலம், குற்றச் செயல்களில் அண்ணனுக்கு சளைக்காத சகோதரன் என்று காட்டியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஞானசேகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அண்மையில், ஞானசேகரன் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், நகைக் கடைகளில் போலி நகைகளை அடகு வைத்து பணம் பறித்த வழக்கில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனின் தம்பி உள்பட 3 பேரை புதுச்சேரி முதலியார் பேட்டை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். இதன் மூலம், குற்றச் செயல்களில் அண்ணனுக்கு சளைக்காத தம்பி என்று காட்டியுள்ளார்.
புதுச்சேரி முதலியார் பேட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட கடலூர் மெயின் ரோட்டில், உள்ள ஒரு நகைக் கடையில் சிலர் போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற்றதாக அந்நகைக் கடையின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, நகைக் கடையில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து சோதனை மேற்கொண்டதில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனின் தம்பி சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சுரேஷ், கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த பிரசாந்த், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஷேக் இஸ்மாயில் இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, சென்னை விரைந்த புதுச்சேரி தனிப்படை போலீசார், ஞானசேகரனின் தம்பி சுரேஷ், பிரசாந்த் மற்றும் ஷேக் இஸ்மாயில் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இவர்கள் இதே போல, பல நகைக் கடைகளில் போலி நகைகளை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இவர்களிடம் இருந்து 4 லட்சம் மதிப்புள்ள சொகுசுக் கார், ரூ.1.50 லட்சம் பணம், நகைகள் உள்ளிட்டவைகளை புதுச்சேரி போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் 3 பேரையும் புதுச்சேரி முதலியார் பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.