மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்ரமணியன் கொலை வழக்கில், ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 2 முக்கிய குற்றவாளிகளான தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியில் மதுரை வடக்குத் தொகுதி துணைச் செயலாளர் பாலசுப்ரமணியன் (46). மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த இவர், மதுரை மாநகர் தல்லாகுளம் காவல் நிலையம் அருகிலுள்ள சொக்கிகுளம் வல்லபாய் தெரு பகுதி சாலையில் செவ்வாய்க்கிழமை காலை நடந்து சென்றபோது, 4 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டிப் படுகொலை செய்தனர். தலைநகர் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை படுகொலை செய்யப்பட்ட அதிர்வலைகள் ஓய்வதற்குள் மதுரையில் நா.த.க நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நா.த.க நிர்வாகி பாலமுருகன் கொலை நடந்த சம்பவ இடத்துக்கு தல்லாகுளம் காவல் உதவி ஆணையர் ராஜேஸ்வரன் உள்ளிட்ட போலீஸார் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, இந்த கொலை வழக்கில், பரத், நாக இருள்வேல், கோகுலகண்ணன், பென்னி ஆகிய 4 பேரை ஜூலை 16-ம் தேடி மாலை தனிப்படை போலீசார் கைது செய்தனர். சொத்து மற்றும் குடும்ப பிரச்னை காரணமாக இந்த கொலை நடந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
கொலையான நா.த.க நிர்வாகி பாலசுப்ரமணியன் மீது ஏற்கனவே ஒரு பெண் உள்பட 3 பேர் கொலை, கொலை முயற்சி வழக்கு என 20 வழக்குகள் உள்ளன என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், நா.த.க நிர்வாகி பாலசுப்ரமணியன் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தந்தை, மகனான மகாலிங்கம், அழகு விஜய்யை போலீசார் கைது செய்தனர்.
பாலசுப்ரமணியனின் தம்பி பாண்டியனின் மகளை மகாலிங்கம் என்பவரது மகனுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். அந்த வகையில் சில பிரச்சினை இருந்துள்ளது. இது தொடர்பாக பாலசுப்பிரமணியனுக்கும், மகாலிங்கத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“