சென்னை அமைந்தகரையில் காதலிக்க மறுத்த 8-ம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அமைந்தகரை பகுதியில் ஒரு கட்டத்தில் 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி பெற்றோர்களுடன் வசித்து வருகிறார்.
இந்த மாணவி நேற்று மதியம் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர். அங்கே இருந்த இளைஞர் மாணவியின் கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டிருக்க அவரிடமிருந்து தப்பிக்க சிறுமி போராடியுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் பலரும் ஓடிவந்ததால் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி துடித்துக்கொண்டிருந்த சிறுமியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தற்போது சிறுமி நல்ல நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
பள்ளி மாணவியை இளைஞர் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், சிறுமி வசிக்கும் வீட்டு கட்டடத்தின் கீழ் தளத்தில் வசிக்கும் இளைஞர் நித்யானந்தன் (26) சிறுமியின் கழுத்தை அறுத்தது தெரியவந்தது. ஒரு சிறிய உணவகத்தை நடந்திவரும் நித்யானந்தன், 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும் அவர் ஏற்கெனவே பலமுறை அந்த சிறுமியிடம் தன்னை காதலிக்க வற்புறுத்தி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாணவி நேற்று மதியம் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். மாணவி வீட்டுக்கு வருவதைப் பார்த்த நித்யானந்தன் பின் தொடர்ந்து சென்று சிறுமியிடம் தன்னை காதலிக்க வற்புறுத்தியுள்ளார். இதற்கு சிறுமி மறுத்ததால் ஆத்திரம் அடைந்த நித்யானந்தன் சிறுமியை பாலியல் ரீதியாக தாக்கியதோடு தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து சிறுமியின் கழுத்தை அறுத்துள்ளார் என்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காதலிக்க மறுத்த 8-ம் வகுப்பு மாணவியை இளைஞர் கழுத்தறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலிசார் தலைமை மறைவாக இருந்த நித்யானந்தனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் சென்னை அமைந்தகரை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"