தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தேர்தல் வாக்குறுதி படி விவசாயிகளின் விளை பொருள்களுக்கு லாபகரமான விலை வழங்காததை கண்டித்து மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்.
அந்த வகையில் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு இரட்டிப்பு தொகை தருவதாக கூறி வழங்காத மத்திய அரசை கண்டித்து பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிடுவதற்காக 120 விவசாயிகள் வாரணாசி புறப்பட்டனர்.
அவர்களை செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் தமிழக போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து இன்று(புதன்கிழமை) சென்னை சாஸ்திரி பவன் மற்றும் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக அய்யாக்கண்ணு அறிவித்தார்.
இதையடுத்து நேற்று மதியம் முதல் அய்யாக்கண்ணு சென்னை செல்வதை தடுப்பதற்காக திருச்சி அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டு முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் அவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை பல்லவன் எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை புறப்பட அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் தயாரானார்கள். இதையடுத்து அய்யாக்கண்ணு மற்றும் மாநில துணைத்தலைவர் மேகராஜன், நிர்வாகிகள் உமா காந்த், உத்தண்டன், வெற்றிவேல், சதாசிவம், மதிமன்னன், ராஜேந்திரன், கென்னடி ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
பின்பு அவர்களை உறையூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதுபற்றி அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறும் போது, ஜனநாயக நாட்டில் போராடுவதற்கு உரிமை உள்ளது. எங்களுக்கு போராட்டம் நடத்துவதற்கு ஐகோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆகவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருக்கிறேன் என்றார். முன்னதாக, திருச்சியில் விவசாயிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, திருச்சி உறையூர் சிஎஸ்ஐ மருத்துவமனை எதிரே உள்ள செல்போன் டவர் மீது தனபால், தமிழ்ச்செல்வன், ராமச்சந்திரன் ஆகிய விவசாயிகள் மூன்று பேர் ஏறி போராட்டம் நடத்தினர். மேலும், மாநில தலைவர் அய்யாக்கண்ணு உள்பட மற்ற விவசாயிகளை விடுதலை செய்யக்கோரி 10க்கம்மேற்பட்ட விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கு வந்த உறையூர் காவல்துறையினர் விவசாயிகளை உடனடியாக கைது செய்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
மேலும், செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தும் விவசாயிகளை கீழே இறக்குவதற்காக திருச்சி கண்டோன்மென்ட் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், விவசாயிகளை கீழே இறக்க முற்பட்ட தீயணைப்புத் துறையினருக்கு விவசாயிகள் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“