/tamil-ie/media/media_files/uploads/2023/04/stray-dogs.jpg)
தெருநாய்களை சுட்டுக்கொன்ற டாக்டர் கைது
திருச்சியில் நாய்கள் தொல்லை அதிகரித்து வந்த நிலையில், தெருநாய்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற மருத்துவரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து விவரம் வருமாறு:
திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சையது ஹசன் ஷாகிப் (வயது 46). இந்திய மருத்துவத்தில் ஒன்றான யுனானி டாக்டராக இருந்து வருகிறார். அதே பகுதியில் கிளினிக்கும் வைத்து மருத்துவம் பார்த்து வருகிறார்.
இதற்கிடையே, இவர் தான் வைத்துள்ள ஏர் பிக்செல் துப்பாக்கியை கொண்டு அந்த பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்கள் மற்றும் பறவைகள் ஆகியவற்றை சுட்டுக் கொன்று வந்துள்ளார்.
அப்பகுதியினர், இதனை பலமுறை கண்டித்தபோதும், டாக்டர் சையது அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதேபோல், ஆசிட் கலந்த குடிநீரை வைத்து ஏராளமான நாய்களையும் கொன்றுள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காஜாப்பேட்டை பகுதியில் சாலையில் விளையாடிக்கொண்டிருந்த பிறந்து சில நாட்களேயான குட்டி நாய் ஒன்றை தனது ஏர் பிக்செல் துப்பாக்கியால் டாக்டர் சையது ஈவு இரக்கமின்றி கொடூரமாக சுட்டுள்ளார். இதில் அந்த நாய்க்குட்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து பலியானது.
இதுபற்றி அதே பகுதியை சேர்ந்த பிரபு பழனியப்பன் என்பவர் திருச்சி பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் யுனானி டாக்டர் சையதுவை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செய்தி: க. சண்முகவடிவேல்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.