பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை – காவல் துறை அறிவிப்பு

திருத்தணியில் நவம்பர் 6ம் தேதி பாஜக தொடங்க உள்ளதாக அறிவித்த வேல் யாத்திரைக்கு காவல்துறை தடை விதித்துள்ள நிலையில், தடையை மீறி வேல் யாத்திரை நடைபெறும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

By: Updated: November 5, 2020, 09:59:51 PM

திருத்தணியில் நவம்பர் 6ம் தேதி பாஜக தொடங்க உள்ளதாக அறிவித்த வேல் யாத்திரைக்கு காவல்துறை தடை விதித்துள்ள நிலையில், தடையை மீறி வேல் யாத்திரை நடைபெறும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவித்திருந்தார். நவம்பர் 6ம் தேதி திருத்தண்யில் தொடங்கும் இந்த வேல் யாத்திரை டிசம்பர் 6ம் தேதி திருச்செந்தூரில் முடிவடையும் விதமாக திட்டமிடப்பட்டுள்ளதாக எல்.முருகன் அறிவித்திருந்தார்.

பாஜக வேல் யாத்திரையை அரசிய ஆதாயத்திற்காக நடத்துகிறது என்றும் வேல் யாத்திரை மூலம் பாஜக தமிழகத்தில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட திட்டமிட்டிருப்பதாகக் கூறி விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாலர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதே நேரத்தில், பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை விதிக்க கோரி செந்தில்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், இந்த யாத்திரை அனுமதிக்கப்பட்டால், கோவிட் -19 பரவுவதற்கும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் மற்றும் சமூக பிரச்னைகளை உருவாக்குவதற்கும் காரணமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பாபர் மசூதி இடிப்பு நாளான டிசம்பர் 6ம் தேதி இந்த பேரணியை முடிக்க திட்டமிட்டிருப்பது. இனவாத பிரச்னையை உருவாக்குவதற்காக மட்டுமே என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம். சத்தியநாராயணன் மற்றும் நீதிபதி ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “தமிழக பாஜக பிரிவு நவம்பர் 6-ஆம் தேதி திருத்தணியிலிருந்து தொடங்கி டிசம்பர் 6-ஆம் தேதி திருச்செந்தூரில் முடிவடையும் ‘வேல் யாத்திரை’ என்ற பேரணியை ஏற்பாடு செய்துள்ளது. இந்த பேரணி பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது, என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.

மேலும், “ஒரு சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினரின் மீட்பர் என்று கூறும் எந்தவொரு அமைப்பும் சமூக மக்களின் உயிரையும் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். ஆனால், தொற்றுநோய்களின்போது ஒரு மாத கால அரசியல் பேரணியை நடத்துவதில் பாஜக மாநிலப் பிரிவின் செயல், கோவிட் -19ஐ பரப்புவதோடு மட்டுமல்லாமல், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளையும் உருவாக்கக்கூடும்” என்றார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது பாரதிய ஜனதாவின் வேல் யாத்திரையை நிராகரிக்க முடிவு செய்துள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைக்கான அச்சுறுத்தல்கள் உள்ளதால் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது என்று தமிழக அரசு தெரிவித்தது.

இந்நிலையில், “வேல் யாத்திரை விவகாரத்தில் அரசு முடிவு செய்யலாம்” என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாத்திரைக்கு அனுமதி கோரிய மனு மீதும், தடை கோரிய மனு மீதும் அரசு உத்தரவு பிறப்பித்தால் அதை எதிர்த்து வழக்கு தொடரலாம், என மனுதாரர்களுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இதனிடையே, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக 144 தடை இருப்பதால், வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து, நாளை வேல் யாத்திரை தொடங்க இருந்த நிலையில், தமிழக காவல்துறை வேல் யாத்திரைக்கு தடை விதித்தது குறித்து சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, பாஜக தலைவர் எல்.முருகன், “தடையை மீறி வேல் யாத்திரை நடைபெறும். பாஜகவினர் ஒருபோதும் சட்டத்தை மீற்பவர்கள் அல்ல. என்ன நடந்தாலும் துள்ளிவரும் வேல்” என்று கூறினார்.

அதே நேரத்தில், தடையை மீறி வேல் யாத்திரை நடத்தினால் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தித்தணியில் வேல் யாத்திரை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வேல்யாதிரைக்கு தடை விதித்துள்ளது. தடையை மீறி வேல் யாத்திரைக்கு கூடியால் கைது செய்யப்படுவார்கள் என்று திருவள்ளூர் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. திருத்தணியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Police banned vel yathra bjp l murugan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X