பேராசிரியை நிர்மலா தேவியிடம் விடிய விடிய விசாரணை! சிக்குவார்களா முக்கியப் புள்ளிகள்?

நேற்று மாலை கைதாகிய நிர்மலா தேவியிடம் அருப்புக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் குறிப்பிட்டுள்ள உயர் அதிகாரிகள் பற்றியும் விசாரணை நடக்கிறது

கல்லூரி மாணவிகளை பாலியல் வழிக்கு அழைத்துச் செல்ல முயன்ற வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவியை 6 மணி நேரம் கழித்து கைது செய்தனர். நேற்று மாலை கைதாகிய இவரிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்று வருகிறது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணிதத் துறை பேராசிரியையாகப் பணிபுரிந்தவர் நிர்மலா தேவி. இவர், ஒரு சில கல்லூரி மாணவிகளைத் தவறான பாதையில் அழைத்துச் செல்ல முயற்சித்து, தொலைப்பேசியில் உரையாடியுள்ளார். இந்த உரையாடல் சமீபத்தில் இணையதளம் முழுவது பரவிப் பரபரப்பை ஏற்படுத்தியது. அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் நிர்மலா தேவி மீது மாணவிகள் புகார் அளித்தனர்.இதனால், கல்லூரியில் இருந்து நிர்மலா தேவி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
குறிப்பாக அந்த உரையாடலில் கவர்நர் என்று அவர் கூறியுள்ளார், மேலும் இந்தக் காரியத்தை சில உயர் அதிகாரிகளுக்காகச் செய்வதாக அவர் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகமும், மாதர் அமைப்பும் அவர் மீது, புகார்கள் அளித்தன. நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்துவதற்காக அருப்புக்கோட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர். ஆனால், அவர் வீட்டுக்குள் இருந்துகொண்டு, கதவைத் திறக்க மறுத்தார்.

சுமார் 6 மணி நேரமாக வீட்டின் வெளியே காத்திருந்த போலீசார், இறுதியாக நிர்மலாவின் உறவினர் முன்னிலையில் பூட்டை உடைத்து அவரைக் கைது செய்தனர். வீட்டைச் சூழ்ந்து நிற்கும் ஊடகத்துறையினரை வெளியேற்றினால் தான் வீட்டைவிட்டு வெளியே வருவேன் என நிர்மலா தேவி கூற அவ்வாறு ஊடகத்துறையினர் வெளியேற்றப்பட்டனர். பின்னர் வீட்டிற்கு வெளியே வந்த நிர்மலா தேவியை உடனடியாக கைது செய்து வேனில் ஏற்றி போலீசார் அழைத்துச் சென்றனர்.

அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட நிர்மலாதேவியிடம், விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜராஜன், ஏடிஎஸ்பி மதி, டிஎஸ்பி தனபால் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்துவர பேராசிரியை நிர்மலா தேவியை தூண்டிய உயர் அதிகாரிகள் யார் என்றும் எதர்காக இந்த விவகாரத்தில் கவர்நர் என்ற குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். “எதையும் என்னால் சாதிக்க முடியும். அந்த செல்வாக்கு என்னிடம் இப்போது உள்ளது.” என அவர் கூறியிருந்தார். அப்படியானால் யார் இவருக்கு அந்த அதிகாரத்தை அளித்தது என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.

இதனிடையே, இந்த விவகாரத்தில் மதுரை பல்கலைக் கழகத்திற்கு எந்தத் தொடர்பும் இல்லை என அதன் துணைவேந்தர் செல்லத்துரை விளக்கம் அளித்துள்ளார். பேராசிரியை நிர்மலா தேவி மீதான புகார் குறித்து விசாரிப்பதற்காக 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த செல்லத்துரை 15 நாளில் உண்மையை வெளிக்கொண்டுவருவோம் என்றார்.

×Close
×Close