பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மாதவிடாய் குறித்து தெரிவித்த கருத்திற்கு சமூகவலைத்தளங்களில் பெண்கள் நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கவிஞர் மனுஷ்யபுத்திரன் இரண்டு நாட்களுக்கு முன் ''ஊழியின் நடனம்'' என்ற பெயரில் கவிதை ஒன்றை எழுதி இருந்தார். கேரளா வெள்ள பாதிப்புகளை அடிப்படையாக கொண்டு வெள்ளம் குறித்தும் மழை குறித்தும் புனைவு கவிதை எழுதி இருந்தார்.
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, இந்த கவிதை இந்து மத கடவுள்களை இகழ்வதாகவும், இந்து மத நம்பிக்கைக்கு எதிராக இருப்பதாகவும் கூறி இருந்தார். அதேபோல் இஸ்லாமிய மதவெறி பிடித்து மனுஷ்ய புத்திரன் இப்படி எழுதியுள்ளார் என்றும் குற்றச்சாட்டு வைத்தார்.
மேலும், மனுஷ்யபுத்திரனை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இந்த நிலையில் இந்த பிரச்சனை இணையம் முழுக்க வைரலானது. எச்.ராஜாவிற்கு ஆதரவாக சிலரும், மனுஷ்யபுத்திரனுக்கு ஆதரவாக சிலரும் பேசிக்கொண்டு இருந்தனர்.
இந்நிலையில், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சுழற்சி பற்றி எச் ராஜா அவதூறாக பேசி வருவதாக பெண்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
பெண்கள் சிலர் எச் ராஜாவிற்கு நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சானிட்டரி பேட் மீது “மாதவிடாய் குற்றமில்லை” என்று எழுதி சமூகவலைத்தளத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்து வருகின்றனர். சமூகவலைத்தளங்களில் இந்த விவகாரம் பூகம்பமாக வெடித்துள்ளது.
அதேப் போல் எச். ராஜாவால் தனது உயிருக்கு ஆபத்து என்று கவிஞர் மனுஷ்யபுத்திரன் சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுக் குறித்து அவர் அளித்துள்ள புகாரில் “கடந்த 18-ந்தேதி ‘ஊழியின் நடனம்’ என்ற தலைப்பில் இயற்கை சீற்றம் மழை வெள்ளம் பற்றி பொதுவாக ஒரு பெண்ணை வர்ணித்து கவிதை எழுதி, சமூக ஊடகங்களில் வெளியிட்டேன்.
ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா எனது கவிதையை இந்து கடவுளுக்கு எதிராக களங்கம் கற்பிக்கும் கவிதை என்று தனது டுவிட்டர், பேஸ்புக்கில் எனது பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக குறிப்பிட்டுள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு போலீஸ் நிலையங்களில் என் மீது வழக்குப் பதிவு செய்ய அனைவரையும் தூண்டும் விதத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனால் சமூக விரோதிகள் எனது செல்போன் எண்ணை வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதன்மூலம் என்னை பலர் செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர். வாட்ஸ்-அப் எண்ணுக்கு குறுஞ்செய்திகளும் வருகிறது.
இதுபோன்ற மிரட்டல்களால் எனது உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.