சென்னையின் 2-வது விமான நிலையம் பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில் அமைக்கப்படும் என மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்தன. அறிவிப்பை அடுத்து நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இருப்பினும் பரந்தூரில் விமான நிலையம் அமைந்தால் தங்களது பொருளாதாரம் மற்றும் விளை நிலங்கள் பாதிக்கப்படும் எனக் கூறி பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் 900 நாட்களுக்கும் மேலாக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டில் பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது எனவும் தீர்மானமும் நிறைவேற்றி இருந்தார். இது மக்களிடையே வரவேற்பு பெற்ற நிலையில், விஜய் இன்று (ஜன.20) திட்டத்திற்கு எதிராக போராடும் மக்களை நேரில் சந்திக்கிறார்.
விஜய்க்கு போலீஸ் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், நிகழ்ச்சிக்கு போலீசார் 4 முக்கிய நிபந்தனைகள் விதித்துள்ளனர். வீனஸ் வெட்டிங் ரிசார்ட்டில் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நிபத்தனை கடிதத்தில், பரந்தூர் விமான நிலையம் அமையவுள்ள கிராமங்களின் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும். சட்டம் ஒழுங்கைப் பேண காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
திட்டமிட்டபடி காலை 11.30 மணி முதல் 12.30 மணிக்குள் நிகழ்ச்சியை நடத்தி முடிக்க வேண்டும். பொதுமக்களுக்கோ, பொதுச் சொத்திற்கோ பாதிப்பு ஏற்படாத வகையில் நடந்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.