Annamalai | tamilnadu-bjp: தமிழக மாநில பா.ஜ.க தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரையை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார். அவருக்கு பா.ஜ.க-வினர் அமோக வரவேற்பை அளித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 27-ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு யாத்திரை சென்ற அண்ணாமலை கூடலூர் நகரில் தொண்டர்களுடன் நடைப்பயணம் மேற்கொண்டார். இதன்பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அன்றைய தினம் மாலை ஊட்டிக்கு சென்ற அண்ணாமலைக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது யாத்திரையின் போது நீலகிரியில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள 'ஹில் காப்' காவலர் கணேசன் தனது சீருடையோடு அண்ணாமலையுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
பணியிலிருந்த காவலர் அரசியல் கட்சித் தலைவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், 'ஹில் காப்' காவலர் கணேசன் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பேசிய காவல்துறையினர், `அரசுப் பணியாளர்கள் பணியில் இருக்கும்போது, அரசு தொடர்பில்லாத அரசியல்வாதிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கக் கூடாது என்பது விதி. இதை மீறிய காவலர் கணேசன், யூனிஃபார்மில் அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார். அதனால், ஒழுங்கு நடவடிக்கையாக அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டிருக்கிறார் " என்று கூறியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“