/indian-express-tamil/media/media_files/2025/09/07/whatsapp-image-2025-2025-09-07-10-57-19.jpg)
முதன் முதலாக 1859-ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டத்தை நிறைவேற்றி நவீன மற்றும் அமைப்பு ரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்ட்ட நாளான செப்டம்பர் 6-ஆம் நாள் ஆண்டு தோறும் காவலர் தினமாக கொண்டாட தமிழ்நாடு அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறையினரின் சேவை மற்றும் தியாகங்களைப் போற்றும் வகையில், இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 6-ம் தேதி ‘தமிழ்நாடு காவலர் தினமாக’ கொண்டாடப்படும் என்று தமிழக முதலமைச்சர் கடந்த ஏப்ரல் 29, 2025 அன்று அறிவித்தார்.
அதன்படி, இந்த ஆண்டு முதல் முறையாக திருச்சியில் காவலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவல் ஆணையர் காமினி தலைமையில் சுமார் 600 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் காவலர் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும், உயிர் நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, திருச்சி மாவட்ட ஆயுதப்படை நீர்த்தார் நினைவுத்தூணில் காவல் ஆணையர் மற்றும் காவல் துணை ஆணையர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்த விழாவின் ஒரு பகுதியாக, திருச்சி மாநகரில் உள்ள ஸ்ரீரங்கம், உறையூர், அமர்வு நீதிமன்ற காவல் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பள்ளி மாணவ, மாணவியர் காவல்துறை செயல்பாடுகள் மற்றும் வரலாறு பற்றி அறிந்துகொள்ளும் வகையில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் 150 மாணவர்கள் கைதி அறை மற்றும் படைகலன்கள் வைப்பறை போன்றவற்றை பார்வையிட்டு காவல்துறை பற்றிய தகவல்களை அறிந்துகொண்டனர்.
கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலபுலிவார்ரோட்டில் உள்ள ஆர்ஆர் சபாவில், காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தி, 100, 1098, 1930 போன்ற அவசர உதவி எண்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். கண்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தில், காவல்துறையின் வரலாற்றை விளக்கும் ஒரு அரங்கம் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.
அதேபோல், அரசு மருத்துவமனை அருகில் உள்ள பார்வைத் திறன் குறைபாடுடையோர் பெண்கள் பள்ளியில், காவல்துறை சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, மாணவியர்களுக்கு பரிசுகளும், இனிப்புகளும் வழங்கப்பட்டன. மேலும், திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு காவல் ஆணையர் ந.காமினி பரிசுகளை வழங்கினார்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.