Police decide to take action against Hari nadar and Seeman: மோசடி வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள ஹரி நாடாரை, சீமானுடன் சேர்ந்து நடிகை விஜயலட்சுமிக்கு கொலை மிரட்டல் அளித்த வழக்கில், சிறையில் வைத்து கைது செய்ய சென்னை போலீஸ் கடிதம் எழுதியுள்ளனர்.
தமிழகத்தில் நடமாடும் நகைக்கடை எனப் பெயர் எடுத்தவர் ஹரி நாடார். இவர் பனங்காட்டுப் படை கட்சியின் தலைவராக உள்ளார். மேலும், சினிமா பைனான்ஸியராகவும் இருக்கும் ஹரி நாடார் சினிமாவில் நடிகராகவும் களம் இறங்கினார்.
இந்த சூழலில்தான், கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமன் சாஸ்திரி என்பவர் தனக்கு ஹரி நாடார் வங்கிக் கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.7.2 கோடி ரூபாய் கமிஷனாகப் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், கடந்த ஆண்டு மே மாதம் ஹரி நாடார் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கபட்டுள்ளார்.
இந்தநிலையில், நடிகை விஜயலட்சுமி, சீமானுக்காக ஹரி நாடார் தன்னை மிரட்டுவதாக அளித்த புகாரில், பெங்களூரு சிறையில் இருக்கும் ஹரி நாடாரை கைது செய்ய சென்னை போலீஸ் பெங்களூரு போலீசாருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
நடிகை விஜயலட்சுமி தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இதனிடையே நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை நம்பவைத்து ஏமாற்றிவிட்டதாக வீடியோ வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.
மேலும், சீமான் தொந்தரவு தாங்க முடியவில்லை என சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி, ஜூலை, 2020-ல் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். பின்னர், அவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, எழும்பூர் மாஜிஸ்திரேட் நடிகை விஜயலட்சுமியிடம் வாக்குமூலம் வாங்கினார்.
பின்னர், மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த நடிகை விஜயலட்சுமி, தனது உடல் நலம் முழுமையாக சரியாகாத நிலையில், திடீரென தனியார் மருத்துவமனை வெளியேற்றி விட்டதாகவும், சீமானுக்காக ஹரி நாடார் தன்னை மிரட்டுவதாகவும், சீமான், ஹரி நாடார் இருவரையும் கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டார். மேலும், இதுதொடர்பாக, விஜயலட்சுமி திருவான்மியூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.
விஜயலட்சுமி உயிர் பிழைத்துக் கொண்டதால், அப்போது அந்த வழக்கு எந்த முன்னேற்றம் இல்லாமல் இருந்து வந்த நிலையில், திருவான்மியூர் போலீஸார் தற்போது மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதனால், மோசடி வழக்கில் கைதாகி, பெங்களூரு சிறையில் உள்ள ஹரி நாடாரை, விஜயலட்சுமி வழக்கில் கைது செய்ய அனுமதிக்க கோரி பெங்களூரு போலீஸாருக்கு திருவான்மியூர் ஆய்வாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்தநிலையில் ஹரி நாடாரைத் தொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்புடைய சீமான், சதா ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.