பொய்யான கஞ்சா வழக்கு பதிவு செய்து குடும்பத்தினரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தலைமறைவாக உள்ள முன்னாள் ரவுடி கெளதம் வீடியோ பதிவு செய்து வாட்ஸ் அப் வலைதளங்களில் தற்போது வெளியிட்டுள்ளார்.
கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் மாநகர் முழுவதும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மாநகரில் கஞ்சா விற்பனை செய்து வரும் பலரை காவல்துறையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.

அதன்படி சில தினங்களுக்கு முன் சங்கனூர் பகுதியை சேர்ந்த சூரியபிரகாஷ் என்பவரை கோவை மாநகர காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 450 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் ரத்தினபுரி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான கௌதம் என்பவர் தலைமறைவாக இருந்து கொண்டு அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மூலம் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து கௌதமின் மனைவியான மோனிஷாவின் இல்லத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டதில், கார் ஒன்றில் சுமார் 1500 கிராம் கஞ்சாவும் 4000 ரூபாய் பணமும் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து வீட்டில் உள்ளே சென்று சோதனை மேற்கொண்ட போது கஞ்சா விற்ற பணத்தில் தங்க நகைகள் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து மோனிஷா மற்றும் அவருக்கு உதவியாக இருந்த அவரது சகோதரி தேவி ஸ்ரீ மற்றும் அவரது தாயார் பத்மா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இவர்களிடமிருந்து கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய கார், இருசக்கர வாகனம், எடை போடும் இயந்திரம், கஞ்சா விற்ற பணத்தில் வாங்கிய சுமார் பத்து சவரன் தங்க நகைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் குடும்பத்தினரை கைது செய்ததுடன் போலீசார் தன்னையும் என்கவுண்டர் செய்து விடுவார்கள் என தலைமறைவாக இருக்கும் ரவுடி கௌதம் வீடியோ பதிவிட்டுள்ளார்.

அதில் தான் எந்த நேரமும் என்கவுண்டர் செய்யப்படலாம் அதனால் எச்சரிக்கையாக இருக்குமாறு ரத்னபுரி மற்றும் சரவணம்பட்டி காவல் ஆய்வாளர்கள் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் காவல் நிலையத்தில் சரணடையாமல் நீதிமன்றத்திற்கு சென்று சரணடைந்து விடு அதுதான் உனக்கு பாதுகாப்பு என்று சரவணம்பட்டி மற்றும் ரத்தினபுரி காவல் ஆய்வாளர்கள் தன்னிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எட்டு வருடமாக அடிதடி ஆகிய குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட வந்த தான் தற்போது கடந்த நான்கு வருடங்களாக திருந்தி வாழ்வதாகவும் கெளதம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“