Police explanation on Madurai minor girl death case: மதுரையில் 17 வயது சிறுமி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு போதை மருந்து கொடுக்கப்பட்டது பற்றிய ஊகங்கள் வெளிவந்ததை அடுத்து, மதுரை ஊரக எஸ்பி வி பாஸ்கரன் அத்தகைய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். மேலும் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை அல்லது போதைப்பொருள் கொடுக்கப்படவில்லை என்றும், இந்த வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் எஸ்பி பாஸ்கரன் கூறினார்.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி பிப்ரவரி 14 அன்று தனது வீட்டில் இருந்து காணாமல் போனதாக குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து சிறுமி காணாமல் போனதாக போலீசார் வழக்கு பதிவு விசாரணையில் இறங்கினர்.
விசாரணையில், சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த நாகூர் ஹனிபா என்பவர் காதலித்து வந்ததாகவும், அவர் தான் சிறுமியை அழைத்துச் சென்றதாகவும் போலீசார் கண்டறிந்தனர். ஆனால், இருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், ஹனிபாவின் தாயார் சிறுமியை மார்ச் 3-ம் தேதி மீண்டும் சிறுமியின் வீட்டில் கொண்டு வந்து விட்டுள்ளார்.
அப்போது சிறுமி உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், குடும்பத்தினர் சிறுமியை ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிறுமியின் உடல்நிலை மோசமானதால் சிறுமியை அரசு ராஜாஜி மருத்துவமனையில் (ஜிஆர்ஹெச்) அனுமதித்தனர். ராஜாஜி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் சிறுமி விஷத்தை உட்கொண்டிருக்கலாம் என்று கூறியுள்ளனர். ஆனால் சிறுமி சுயநினைவின்றி இருந்ததால் போலீசாரால் இதை விசாரிக்க முடியவில்லை. இந்தநிலையில் சிறுமி மருத்துவமனையில் இறந்தாள்.
இதையும் படியுங்கள்: பதவி படுத்தும் பாடு… ஸ்டாலின் எச்சரித்தும் அடங்காத ‘தலை’கள்!
இதற்கிடையில் சிறுமியை கடத்தியதாக் சொல்லபடும் ஹனிபாவை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஹனிபா, தான் சிறுமியை காதலித்து வந்ததாகவும், கடந்த 14-ம் தேதி நண்பர்கள் உதவியுடன் சிறுமியை மதுரையில் உள்ள நண்பர் பெருமாள் கிருஷ்ணனின் வீட்டுக்கு கூட்டிச்சென்று, பின்பு பள்ளிபாளையத்திலுள்ள தன் சித்தப்பா இப்ராஹிம் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஊரில் பிரச்னை ஏற்பட்டு, போலிஸ் தேடுகிறது என்று தனது தாயார் தெரிவித்ததால் தானும் அந்த சிறுமியும் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், அதில் தான் எலி மருந்தை துப்பி விட்டதாகவும், ஆனால், அந்த சிறுமி எலி பேஸ்ட் சாப்பிட்டதால் உடல்நிலை சரியில்லாமல் போகவே அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் எலி மருந்து சாப்பிட்டதை மறைத்து சிகிச்சை மேற்கொண்டதாகவும், அதில் பலனில்லாததால் மார்ச் 2-ம் தேதி சிறுமியை ஊருக்கு அழைத்துவந்து, சிறுமியின் தாயாரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றதாகவும் கூறியுள்ளார். இந்தநிலையில் தான் சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
இதனையடுத்து, மதுரை எஸ்பி பாஸ்கரன், கூட்டு பலாத்காரம் இல்லை என்றும், சிறுமியின் உடலில் உள்ள ஊசி அடையாளங்கள் தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் போது ஏற்பட்டவை என்றும் கூறினார்.
மேலும், சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவர்களை எச்சரித்த எஸ்பி பாஸ்கரன், சமூக வலைதளங்களில் வழக்கு தொடர்பான விவரங்களை வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆரம்பத்தில், ஒரு 'சிறுமி காணவில்லை' வழக்கு பதிவு செய்யப்பட்டது, பின்னர் அது 143,366 (A), 307 IPC, 5 (L), 6 போக்சோ (POCSO) வழக்காக மாற்றப்பட்டது. இருப்பினும், இந்த வழக்கு மீண்டும் 302 IPC ஆக மாற்றப்பட்டது, அவளுடைய மரணத்தைத் தொடர்ந்து 307 IPC தவிர மற்ற அனைத்து பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் நாகூர் ஹனிபா, அவரது தாயார் மதினா பேகம், உறவினர்கள் ராஜம் பேகம், சுல்தான் அலாவுதீன் மற்றும் அவரது நண்பர்கள் பி பிரகாஷ், எம் பெருமாள் கிருஷ்ணன், ராஜா முகமது, ஷாகுல் ஹமீது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.
இதனிடையே, இழப்பீடு வழங்கக் கோரி மேலூரில் உள்ள நெடுஞ்சாலைகள் அருகே குடும்பத்தினரும் கிராம மக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிறுமியின் குடும்பத்தினரிடம் எஸ்பி பாஸ்கரன் பேச்சுவார்த்தை நடத்தினார். தற்போது சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
(மன அழுத்தத்தில் இருந்தால் அல்லது தற்கொலை எண்ணங்கள் இருந்தால், சுகாதாரத் துறையின் உதவி எண்ணான 104 அல்லது சினேகா தற்கொலை தடுப்பு மையம் உதவி எண்ணான 044- 24640050 ஐ அழைக்கவும்.)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.