ஜெயலலிதா நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வாகனத்தை வழிமறித்து அமமுகவினர் முற்றுகையிட்டது மற்றும் கார் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக அதிமுக அளித்த புகாரின் பேரில் அமமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளான நேற்று காலை அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் -இபிஎஸ் தலைமையில் அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
அதிமுகவினர் தவிர டிடிவி தினகரன் தலைமையில் அமமுகவினர், சசிகலா, கே.சி.பழனிசாமி என தனித்தனியாக அஞ்சலி செலுத்த போலீஸார் அனுமதி அளித்திருந்தனர். முதலில் அதிமுக அடுத்து அமமுக அடுத்து சசிகலா என அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதிமுகவினர் அஞ்சலி செலுத்திய பின்னர் கலைந்துச் சென்றனர்.
அப்போது அமமுகவினர் ஊர்வலமாக வருவதற்காக குவிந்திருந்தனர். அஞ்சலி முடிந்து ஓபிஎஸ்-இபிஎஸ் கார்கள் ஒன்றாக புறப்பட்டப்போது அங்கு குவிந்திருந்த அமமுகவினர், ஓபிஎஸ் – இபிஎஸ் வாகனங்கள் முற்றுகையிட்டு இபிஎஸ்-க்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் அதிமுக – அமமுக தொண்டர்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, போலீஸார் தலையிட்டு அமைதிப்படுத்தி கார்கள் செல்ல வழி ஏற்படுத்திக்கொடுத்தனர்.
இதன் பின்னர், ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று அஞ்சலி செலுத்த வந்த போது முன்னாள் முதல்வர்கள் ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் கார் மீது செருப்பு வீசி தாக்க முயன்றதாக, மயிலாப்பூர் அம்மா பேரவை துணைச் செயலாளரான மாறன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் அமமுக கட்சியை சேர்ந்தவர்கள் மீது நான்கு பிரிவின் கீழ் அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாறன் அளித்த புகாரில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ, பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காலை 10 மணி அளவில் அஞ்சலி செலுத்திவிட்டு வந்தபொழுது 10.45 மணி அளவில் எம்ஜிஆர் நினைவிடம் அருகே டிடிவி தினகரன் தூண்டுதலின்பேரில் அமமுக அக்கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பயங்கர ஆயுதங்களைக்காட்டியும், செருப்பை கார் மீது வீசியும், அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசியும் கொலை மிரட்டல் விடுத்தனர். கட்டைகளாலும் செருப்பாலும் என் மீதும், செங்கல்பட்டு மேற்கு எம்ஜிஆர் மன்ற செயலாளர் ராஜப்பா மீதும் பட்டு காயம் ஏற்பட்டது. இந்த செயலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், என குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த புகாரின் அடிப்படையில் அமமுக நிர்வாகிகள் மீது அண்ணா சதுக்கம் போலீசார் 294(b) (அவதூறாக பேசுதல்), 148 (ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபடுதல்), 323 (காயம் ஏற்படுத்துதல்), 506(2) (கொலை மிரட்டல்), வாகனத்தை தாக்கியது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே அமமுக தலைவர் டி.டி.வி. தினகரன், தங்களின் அரசியல் எதிரிகளை ஜனநாயக முறையில் எதிர்கொள்வோம் என்றும், வன்முறையில் நம்பிக்கை இல்லை என்றும். போலீசாருக்கு உண்மை தெரியும், என்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil