/indian-express-tamil/media/media_files/MoEB8fxJiiXVV9chCwHk.jpeg)
உளுந்தூர் பேட்டையில் இருந்து வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்ட 18 வயது சிறுமியை அடித்து சித்ரவதை செய்து துன்புறுதியதாக பாதிக்கப்பட்ட சிறுமி வீடியோ வெளியிட்டதைத் தொடர்ந்து, நீலாங்கரை போலீசார் பல்லாவரம் தி.மு.க. எம்.எல்.ஏ மகன் மற்றும் மருமகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, இந்த சம்பவத்திற்கு எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பல்லாவரம் தி.மு.க எம்.எல்.ஏ கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.
பல்லாவரம் தி.மு.க எம்.எல்.ஏ கருணாநிதி மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லின் இருவரும், உளுந்தூர்பேட்டையில் இருந்து வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்ட 18 வயது சிறுமி ரேகாவை அடித்து துன்புறுத்தியதாகவும் ஆண்டோ மதிவாணன் சிறுமிக்கு சிகரெட்டால் சூடு வைத்து, தலைமுடியை வெட்டி சித்ரவதை செய்ததாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி வீடியோ வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்ட சிறுமியைக் கொடுமைப்படுத்திய பல்லாவரம் தி.மு.க எம்.எல்.ஏ மகன் மற்றும் மருமகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் ஆகியோர் வலியுறுத்தினர்.
இதைத் தொடந்து, பாதிக்கப்பட்ட இளம் பெண் தரப்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், நீலாங்கரை மகளிர் காவல் நிலைய போலீசார், பல்லாவரம் தி.மு.க எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம், ஆபாசமாக பேசுதல், மிரட்டுதல் தாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் இருவரும் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல்லாவரம் தி.மு.க எம்.எல்.ஏ மகன் ஆண்டோ மதிவாணன், வீட்டு வேலை செய்வதற்காக அழைத்துவரப்பட்ட சிறுமியை வன்கொடுமை செய்த விவகாரம், சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரின் கண்டனத்தைப் பெற்று வரும் நிலையில், பல்லாவரம் தி.மு.க எம்.எல்.ஏ கருணாநிதி, எனக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
தி.மு.க எம்.எல்.ஏ கருணாநிதி தனது மகன் மற்றும் மருமகள் மீதான புகார் குறித்து அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது: “என் மகனுக்கு திருமணமாகி 7 ஆண்டுகளாக திருவான்மியூரில் தனியாக வசித்து வருகிறார். இந்த சம்பவத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.