இஸ்லாமியர்களுடன் கொரோனாவை தொடர்பு படுத்தியதாக மாரிதாஸ் மீது வழக்கு

இஸ்லாமிய அமைப்புகளையும் கொரோனா வைரஸ் தொற்று பரவலையும் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் பேசியதாக பாஜகவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துதெரிவித்துவரும் மாரிதாஸ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

By: Updated: April 5, 2020, 05:12:58 PM

இஸ்லாமிய அமைப்புகளையும் கொரோனா வைரஸ் தொற்று பரவலையும் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் பேசியதாக பாஜகவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துதெரிவித்துவரும் மாரிதாஸ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் இப்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அந்து இரண்டாம் கட்டத்திற்கு செல்வதற்குள்ளாகவே விரைவாக செயல்பட்ட மத்திய அரசு மார்ச் 25 முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து நடைமுறையில் உள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள், தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3000ஐ தாண்டிவிட்டது. கொரோனாவால் 79 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்திலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 385 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள 485 பேரில் பெரும்பாலானோர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஊடகங்களிடம் தெரிவித்தார். அவர் கூறியதை வைத்து சிலர், குறிப்பிட்ட மதத்தினரால்தான் கொரோனா தொற்று அதிக அளவில் பரவியது என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டது.

இதனைத் தொடந்து, தமிழக முதல்வர் பழனிசாமி, கொரோனா வைரஸ் ஒரு குறிப்பிட்ட மதத்தினரால், சமூகத்தினரால் பரவுகிறது என்று வதந்தி பரப்புவதை தவிர்க்க வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா வைரஸ் சாதி மத பேதமின்றி அனைவரையும் தாக்கும். அதனால், அனைவரும் ஒன்றிணைந்து கொரோனைவை விரட்ட உறுதியேற்போம் என்று கூறியிருந்தார்.

அதே நேரத்தில், டெல்லி தப்லிக் ஜமாஅத் மாநாட்டில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மேலப்பாளையத்தைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டது தெரியவந்ததையடுத்து, அவர்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு மேலப்பாளையம் பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலப்பாளையத்துக்கு செல்லும் அனைத்து வழிகளும் மூடப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக மேலப்பாளையத்தில் போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாஜகவுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் கருத்துகளை தெரிவித்துவரும் மாரிதாஸ், கொரோனா வைரஸ் தொற்று பரவலோடு இஸ்லாமிய சமுதாய அமைப்புகளை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

மாரிதாஸின் கருத்து சமூக ஊடகங்கள் மூலமாக வேகமாக பரவியது. மாரிதாஸின் கருத்துக்கள் இஸ்லாமியர்களின் மனதை காயப்படுத்தியதாக கூறப்பட்ட நிலையில், நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமது காதர் மீரான் மாரிதாஸ் மீது மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

முகமது காதர் மீரான் அளித்துள்ள புகாரில், கொரோனா வைரஸ் பரவலுடன் இஸ்லாமிய அமைப்பை தொடர்புபடுத்தி அவதூறு கருத்துக்களை பரப்பிவரும் மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.

இந்த புகாரின் பேரில், மேலபாளையம் காவல் நிலையத்தில், மாரிதாஸ் மீது மதங்களுக்கு இடையே ஒற்றுமையை குலைப்பது. பிற மதங்களை அவதூறாக பேசுவது, மதங்களின் அடிப்படையில் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவது, சமூக விரோதா கருத்துகளை வெளியிட்டு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவது என ஐபிசி 292 A, 295 A, 505 (2), 67B தகவல் தொடர்பு சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது பிணையில் வெளியே வர முடியாத 505(2) பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மாரிதாஸ் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது தன்னை மிரட்டிப் பார்ப்பதற்காகவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மாரிதாஸ் வலதுசாரி ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவர். இவர் தொடர்ந்து சமூக ஊடகங்களில் அரசியல் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டு வருகிறார். இவருடைய கருத்துகள் அவ்வப்போது சமூக ஊடங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி மாரிதாஸ் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். மாரிதாஸ் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அவருடைய இந்த கருத்துகளுக்காக அவ்வப்போது சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையாவதும் உண்டு.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Police fir registered on maridhas for darogatory statement corona virus spread connect with muslims

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X