கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமலில் ஊரடங்கு உத்தரவைப் பொருட்படுத்தாமல் சிலர் தேவையில்லாமல் வெளியே வந்து பைக்கில் சுற்றுபவர்களுக்கு தமிழக காவல்துறையினர் விதவிதமான நூதனை தண்டனைகள் அளிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமர் மோடி நாடு முழுவதும் 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததை அடுத்து மார்ச் 25 முதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கு தவிர யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று தமிழக அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.
இதனிடையே, தமிழகத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளார்.
கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க தமிழக காவல்துறையினர் அரசின் ஊரடங்கு உத்தரவை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் தீவிரமாக உள்ளனர். ஆனால், சிலர் ஊரடங்கு உத்தரவை பொருட்படுத்தாமல் தேவையில்லாமல் பைக்கில் வெளியே சுற்றிவருகின்றனர். அவர்களுக்கு கொரோனா பரவலைத் தடுக்க வேண்டிய அவசியத்தை அறிவுறுத்தும் காவல்துறையினர் அவர்கள் நிலைமையை உணர வேண்டும் என்பதற்காக விதவிதமான நூதன தண்டனைகளை வழங்கி வருகிறனர். காவல்துறை நூதன தண்டனை வழங்கும்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதோடு, தேவையில்லாமல் வெளியே சுற்றக் கூடாது என்ற எச்சரிக்கையையும் ஏற்படுத்தி வருகிறது.
மார்ச் 25-ம் தேதி ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வந்த பிறகு ஒசூரில் சிலர் வெளியே சுற்ற அவரகளுக்கு அறிவுரை கூறிய போலீசார் அவர்களை நாற்காலிபோல அமர வைத்து ஆசிரியர்பள்ளி மாணவர்களுக்கு தண்டனை வழங்குவது போல நூதன தண்டனை வழங்கினர்.
அதே போல, சிலர் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியே சுற்றியவர்களைப் பிடித்து அவர்களைக் கண்டித்ததோடு அவர்களைத் தோப்புக்கரணம் போடச் சொல்லி தண்டனை வழங்கி அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இளைஞர்கள் சிலர், ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் கிரிக்கெட் விளையாட அவர்களைப் பிடித்த போலீசார் அவர்களை குட்டிக்கரணம் அடிக்கச் சொல்லி நூதன தண்டனை வழங்கி எச்சரித்து அனுப்பினர்.
சென்னையில் இன்று, ஊரடங்கு உத்தரவை மீறி பைக்கில் வெளியே சுற்றிய நபர்களைப் பிடித்த காவலர் ஒருவர் கொரோனா வைரஸ் போல வடிவமைக்கப்பட்ட ஹெல்மெட் அணிந்து அவர்களிடம் கொரோனா வைரஸ் பரவல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, தேவையில்லாமல் வெளியே சுற்றக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினார்.
அதே போல, சென்னையில் ஒரு நபர் அவசியமில்லாமல் பைக்கில் சுற்றிகொண்டிருக்க அவரை தடுத்து நிறுத்திய காவலர் ஒருவர், ஒரு திருக்குறள் சொல்லுங்கள் என்று கேட்கிறார். அதற்கு அந்த நபர் திருக்குறளை தவறாக கூறியதால் கோபடமைந்த காவலர், போய் முதலில் திருக்குறளை சரியாக படித்துவிட்டு வாருங்கள் பிறகு வெளியே சுற்ற விடுகிறேன் என்று கோபமாக கூறுகிறார்.
இன்னொரு காவலர் ஒரு திருக்குறள் தெரியவில்லையா? எத்தனை திருக்குறள் இருக்கிறது என்று கேட்கிறார்.
இதே போன்று, மாணவர் ஒருவர், உரடங்கை மதிக்காமல் வெளியே சுற்றிக்கொண்டிருக்க, அவரைக் கண்டித்த காவலர் ஒருவர் தமிழ்த்தாய் வாழ்த்து பாட கூறுகிறார். ஆனால், அவர் தெரியாமல் விழித்துக்கொண்டு நிற்க, தமிழ்த்தாய் வாழ்த்துகூட தெரியாது. பிளஸ் 2 படிக்கிற தமிழ்த்தாய் வாழ்த்து தெரியாதா? தமிழ்த்தாய் வாழ்த்து எழுதியது யார் என்று தெரியாதா என்று கடுமையாக கேட்டு நூதனமாக எச்சரித்து அனுப்பியுள்ளார்.
இதனிடையே, ஊரடங்கை மதிக்காமல் சென்னை வாலாஜா சாலையில், அவசியமில்லாமல் பைக்கில் சுற்றும் சிலரை மடக்கிப்பிடித்த போலீசார், நூதன தண்டனையாக அவர்களின் ஆடைக்கும் வண்டிக்கும் பெயிண்ட் அடித்து எச்சரித்து அனுப்பினர்.
இப்படி, ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் பைக்கில் ஊர் சுற்றும் நபர்களைப் பிடித்து தமிழக போலீசார், கொரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, விதவிதமாக நூதன தண்டனைகளை வழங்கி அவர்களை எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.