சென்னை அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆன்மீக சொற்பொழிவாளராக வலம் வந்த மகாவிஷ்ணு என்பவர் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது மாற்றுத் திறனாளிகள் பற்றி இழிவாகவும், பாவ-புண்ணியம் என பிற்போக்குதனமாக கருத்துகளையும் தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தொடர்ந்து அவர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய மகாவிஷ்ணுவை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து
அவரை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை செய்ய சைதாப்பேட்டை போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அதன்படி, மகா விஷ்ணுவை 3 நாள் காவலில் எடுத்துள்ள சைதாப்பேட்டை போலீசார் அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தியதாக தகவல் கூறப்பட்டுள்ளது. சொற்பொழிவு மூலம் சம்பாதிக்கும் பணம் குறித்தும், வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை குறித்தும் விசாரணை நடத்தியதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், மகா விஷ்ணுவை திருப்பூரில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகத்திற்கு அழைத்து சென்றும் போலீசார் விசாரணை நடத்தினர். மகா விஷ்ணு யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ள அனைத்து வீடியோக்களையும் போலீசார் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“