மதுரை மத்திய சிறையில் போலீசார் ஆய்வு: புழல் சிறையில் கைதிகளின் சொகுசு வாழ்க்கை புகாரைத் தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
புழல் சிறை உட்பட தமிழகத்தில் இருக்கும் சிறைச்சாலைகளில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் புழக்கத்தில் இருப்பதாக செய்திகள் கடந்த சில மாதங்களாக வெளி வந்துக் கொண்டிருந்தன.
இந்நிலையில், மாநில மனித உரிமை ஆணையம் தாமாகவே முன்வந்து சிறைத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் ஒன்றை அனுப்பியது.
அதில், ‘சிறையில் நடைபெறும் முறைகேடுகள் பற்றி உரிய விளக்கம் அளிக்க வேண்டும’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சம்மனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர்.
புழல் ஜெயிலிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கைதிகளிடம் இருந்து செல்போன்கள், கஞ்சா உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஸ்மார்ட்ஃபோன்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
புழல் ஜெயிலில் தண்டனை பெற்று வரும் பாகிஸ்தான் கைதியான ரசூலுதீன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது புகைப்படங்கள் மூலம் தெரியவந்தது.
ரசூலுதீன் மட்டுமில்லாமல் சிறையில் இருக்கும் பல கைதிகளும் ஜெயிலில் இருப்பது போல் இருக்கவில்லை. 5 ஸ்டார் ஓட்டலில் விடுமுறை நாட்களை கழிப்பது போன்று கலர்ஃபுல் ஆடைகள், அவர்கள் தங்கிருக்கும் அறைகளில் ஏசி, டிவி போன்ற வசதிகளும் அமைக்கப்பட்டிருந்தன.
சிறை அறைக்குள் இவை எப்படி வந்தன? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறையில் இருந்தவாறே வங்காளதேசம், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்போன்களில் சிலர் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு உடந்தையாக இருந்த சிறைக் காவலர்கள் குறித்து விசாரணை நடைபெற்றது. மேலும் புழல் சிறையின் 5 தண்டனை கைதிகள் தமிழகத்தின் வெவ்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.
மதுரை மத்திய சிறையில் திடீர் ஆய்வு
இதனிடையே இன்று காலை மதுரை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். காவல் உதவி ஆணையர், 2 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 150 போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறை கைதிகளிடம் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் உள்ளதா? என சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக கடந்த 16ம் தேதி சேலம், கோவை மற்றும் கடலூர் சிறைகளிலும், 19ம் தேதி பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது சிறைகளில் தடை செய்யப்பட்ட சில பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியது.
புழல் சிறையில் கைதிகளின் சொகுசு வாழ்க்கை புகாரை தொடர்ந்து தமிழக சிறைகளில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.