குடியரசு தலைவர் திரெளபதி முர்மு தமிழகத்திற்கு வருகை தரவுள்ளதை தொடர்ந்து, போலீசார் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வரும் 30-ஆம் தேதி திருச்சிக்கு வருகை தருகிறார். அங்கிருந்து திருவாரூர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவுள்ளார். அதன் பின்னர், ஸ்ரீரங்கம் யாத்திரிகர் நிவாஸ் பகுதியில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கி, ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். இதனால், திருச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, துணை ஆணையர் விவேகானந்தன், செல்வகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களில் நேரில் ஆய்வு செய்தனர்.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, கோவை சூலுரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைகிறார். அதன்பின்னர், ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் சென்று மீண்டும் திருச்சிக்கு வருகிறார். இதனிடையே, குடியரசு தலைவர் திரெளபதி முர்மு முதன்முறையாக ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி - க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“