தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1033வது சதயவிழா நடைபெற்றுவரும் நிலையில் கோயிலில் உள்ள சிலைகளின் தொன்மைத் தன்மை மற்றும் உண்மைத் தன்மை குறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர், தொல்லியல் துறையினரும் ஆய்வு நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை பெரிய கோயிலில் சோதனை:
தஞ்சை பெரிய கோயிலில் உள்ள ராஜராஜன் சோழன், அவரது மனைவி லோகாமா தேவி சிலைகள் உட்பட பல சிலைகள் காணாமல் போனதாக புகார் எழுந்தது. அப்புகாரின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதில் காணாமல் போன சிலைகள் குஜராத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்ததையறிந்து அவற்றை போலீசார் மீட்டனர். இந்நிலையில் அக்கோயிலில் உள்ள 42 சிலைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராம், தொல்லியல் துறை இணை இயக்குநர் நம்பிராஜன் ஆகியோர் தலைமையில் தஞ்சை பெரிய கோயிலில் 4ம் கட்டமாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இதில் சிலைகளின் உயரம், அகலம், எடை, தொழில்நுட்ப ரீதியில் ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். தஞ்சை பெரியக்கோயிலில் சதய விழா நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆய்வு நடைபெற்று வருவது பக்தர்கள், சுற்றுலா பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.