பெரியபாண்டியனின் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையில் கறுப்பு பட்டை அணிந்து மரியாதை செலுத்தினார். துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸும் அஞ்சலி செலுத்தினார்
சென்னை குளத்தூரில் நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிப்பதற்காக ராஜஸ்தான் சென்ற சென்னை மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் கொள்ளையர்களுடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இது தமிழகம் முழுவதும் காவல்துறையினரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பெரிய பாண்டியனின் மறைவு அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மூவிருந்தாளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சாலைப்புதூர் கிராம மக்கள் அனைவரையும் கடும் சோகத்தில் ஆழ்த்தியது.
மறைந்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதி கொடுக்கப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
இந்நிலையில், பெரியபாண்டியின் உடலை சென்னை கொண்டு வர, இணை கமிஷனர் சந்தோஷ் குமார் தலைமையில் போலீசார் ராஜஸ்தான் விரைந்தனர். இன்று அதிகாலை ஜெய்பூரில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் பகல் 12.30 மணிக்கு அவரது உடல் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தது.
பெரியபாண்டியனின் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையில் கறுப்பு பட்டை அணிந்து விமான நிலையத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், டிஜிபி, சென்னை காவல்துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து, இன்று மாலை பெரிய பாண்டியனின் உடல் சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு, அங்கிருந்து அவரது சொந்த ஊரான சாலைப்புதூருக்கு கொண்டுச் செல்லப்படுகிறது. அவரது இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள சங்கரன்கோவில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாலைப்புதூர் கிராமத்தில் குவிந்துள்ளனர்.
பிற்பகல் 01:45 - சென்னை விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடலுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ராஜஸ்தான் கொள்ளையரை உடனடியாக கைது செய்து, தமிழகத்திற்கு கொண்டு வர அரசு முயற்சி செய்ய வேண்டும். தேவைப்பட்டால் ராஜஸ்தான் முதலமைச்சரை தொடர்பு கொண்டு விரைந்து கைது செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.