கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாமக நிர்வாகியைத் தாக்கிய வீடியோ வைரலானதைத் தொடர்ந்து அவர் சனிக்கிழமை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே உள்ள மூங்கில்பாடி கிராமத்தைச் சேர்ந்த பாமக நிர்வாகி சக்திவேல். இவர் சின்ன சேலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுகாகரை விமர்சித்து வாட்ஸப்பில் ஒரு வீடியோ வெளியிட்டார்.
அந்த வீடியோ சின்ன சேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்ஸ்பெக்டர் சுதாகரின் பார்வைக்கும் சென்றது. இதையடுத்து, மூங்கில்பாடிக்கு இரவு நேரத்தில் சென்ற இன்ஸ்பெக்டர் சுதாகர், வீட்டிலிருந்த பாமக நிர்வாகி சக்திவேலை தாக்கியுள்ளார். அப்போது, அவரை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல இன்ஸ்பெக்டர் சுதாகர் முயற்சித்தபோது சக்திவேலின் பெற்றோர்கள் தடுத்துள்ளனர். அவர்களை தள்ளிவிட்டு அழைத்துச் சக்திவேலை போலீஸ் ஜீப்பில் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, அங்கே இருந்த சுதாகரின் நண்பர்கள் தங்கள் செல்போனில் எடுத்த வீடியோவை சமூக ஊடகங்களில் பரப்பி இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.
சின்னசேலம் தாலுகா மூங்கில்பாடி கிராமம் பாமக ஒன்றிய செயலாளர் சக்திவேலை, சின்னசேலம் காவல் ஆய்வாளர் அத்துமீறி தாக்கியுள்ளார்… தகுந்த விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை.. #PMK pic.twitter.com/uRCHkRTpQ4
— Sriramrpckanna (@Sriramrpckanna1) April 11, 2020
இன்ஸ்பெக்டர் சுதாகர் பாமக நிர்வாகியை தாக்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், சுதாகரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
பாமக நிர்வாகியை தாக்கியதால் சின்ன சேலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுதாகரை ஆயுதப் படைக்கு மாற்றி காவல்துறை நடவடிக்கை எடுத்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், “சின்ன சேலம் மூங்கில்பாடியில் பாமக ஒன்றிய செயலாளர் சக்திவேலை தாக்கிய இன்ஸ்பெக்டர் சுதாகர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டது மட்டும் போதாது. வழக்குப்பதிந்து கைது செய்து, பணியிடை நீக்கம் செய்யும் அளவுக்கு அவருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளன. இன்ஸ்பெக்டர் சுதாகர் திண்டிவனத்தில் பணியாற்றிய போது பாமகவினர் இருவரைத் தாக்கியது தொடர்பாக நீதிமன்றத்தின் மூலம் அவர் மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. மனித உரிமை மீறலுக்காக தண்டிக்கப்பட்டுள்ளார். இப்படிப்பட்டவர்கள் காவல் பணியில் நீடிக்கக்கூடாது. அவருக்கு கல்வராயன்மலை பகுதியில் மது ஒழிப்பு பணி வழங்கப்பட்டு இருந்த நிலையில், அவர் குடிபோதையில் மூங்கில்பாடி வந்து, மின்சாரத்தை துண்டித்துவிட்டு பா.ம.க. நிர்வாகியை தாக்கியிருப்பது காவல்துறையின் புனிதத்தை கெடுக்கும் செயல். காவல்துறையின் நோக்கங்களுக்கு மாறாக, மனித உரிமைகளை மீறுவதையும், அப்பாவிகளை தாக்குவதையும் மட்டுமே பிழைப்பாக கொண்ட இவரை போன்றவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.