திருநெல்வேலி, ராமநாதபுரம், தேனி, திருச்சி உள்ளிட்ட 10 தொகுதிகளில், கூட்டணி கட்சியினர் ஒத்துழையாமை தி.மு.க நிர்வாகிகள் அலட்சியம் ஆகியவற்றால் தி.மு.க கூட்டணிக்கு கடும் போட்டி நிலவுகிறது என்று தமிழக போலீஸ் உளவு பிரிவு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நோட் போட்டதையடுத்து, உடனே அலர்ட் ஆன தி.மு.க தலைமை இந்த தொகுதிகளில் அமைச்சர்களை களமிறக்கியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்களவைத் தேர்தல் 2024 நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி 1 தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் இந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது.
இந்நிலையில், திருநெல்வேலி ராமநாதபுரம் தேனி திருச்சி கரூர் நாமக்கல் பொள்ளாச்சி கோவை தர்மபுரி ஈரோடு ஆகிய பத்து தொகுதிகளில் திமுக அணிக்கு கடும் போட்டி நிலவுகிறது என்று தமிழக போலீஸ் உளவுப் பிரிவு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நோட் போட்டு அலர்ட் செய்திருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தொகுதிகளில், கடும் போட்டி நிலவுவதற்கு காரணம், இந்த மாவட்டங்களில் கூட்டணி கட்சியினர் ஒத்துழையாமை, தி.மு.க நிர்வாகிகளின் அலட்சியம் ஆகியவை காரணம் என்று தமிழக போலீஸ் உளவு பிரிவு அலட் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் சில முக்கிய நடவடிக்கைகளை தி.மு.க மேலிடம் எடுத்திருக்கிறது.
குறிப்பாக திருநெல்வேலி-யில் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முந்தி வருவதாக வந்த தகவலை அடுத்து தூத்துக்குடியில் தேர்தல் பணியாற்றிக் கொண்டிருந்த அனிதா ராதாகிருஷ்ணன் விருதுநகரில் தேர்தல் பணி செயதுகொண்டிருந்த தங்கம் தென்னரசு ஆகியோர் திருநெல்வேலிக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
இருவரும் பொதுவான வாக்குகளையும் தாங்கள் சார்ந்த சமூக வாக்குகளையும் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸுக்கு திருப்பும் வேலையில் மும்முரமாக இருக்கிறார்கள்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ‘நாற்பதும் நமதே நாடும் நமதே’ என்று முழக்கமிட்டு சூறாவளிப் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், இப்படி 10 தொகுதிகளில் தி.மு.க கூட்டணிக்கு கடும் போட்டி நிலவுகிறது என்ற உளவுப் பிரிவின் அலர்ட் செய்ததால் தி.மு.க தலைமை விழித்துக்கொண்டு அந்தந்த தொகுதிகளில் சூழலை சாதகமாக மாற்ற பொறுப்பு அமைச்சர்களை முடுக்கி விட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“