போதை பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் கிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தடை செய்யப்பட்ட போதை பொருளை பயன்படுத்திய வழக்கில் இதற்கு முன்பாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் வேறு சில நடிகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் கிருஷ்ணாவிடம் தற்போது போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏறத்தாழ. 16 மணி நேரமாக அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முக்கியமாக, மூன்று விஷயங்களை மையப்படுத்தி விசாரணை நடைபெறுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதன்படி, நடிகர் கிருஷ்ணா போதை பொருள் பயன்படுத்தினாரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்றது. இது தவிர போதை பொருளை விற்பனை செய்தாரா? என்றும், இவற்றை விற்பனை செய்பவர்களுடன் தொடர்பில் இருந்தாரா? என்றும் நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கூடுதலாக, போதை பொருள் விற்பனை செய்பவர்களுடன், நடிகர் கிருஷ்ணா பணப்பரிவர்த்தனை மேற்கொண்டாரா என்ற கோணத்திலும் விசாரணை செய்யப்பட்டதாக தெரிகிறது. அந்த வகையில், நேற்று (ஜூன் 25) நடிகர் கிருஷ்ணா காவல் நிலையத்திற்கு வருகை தந்ததில் இருந்து அவரிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இந்த சூழலில் நடிகர் கிருஷ்ணாவின் வீட்டிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், அவர் பயன்படுத்தும் மருந்துகள் உள்ளிட்டவை ஆய்வுக்காக பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, தனது மருத்துவ சான்றிதழ்களையும் நடிகர் கிருஷ்ணா போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். மேலும், தனக்கு இரைப்பை பிரச்சனை உள்ளதாகவும், அதிர்ச்சியான தகவல்களை கேட்டால் படபடப்பு ஏற்படும் என்றும் அவர் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான மருத்துவ சான்றிதழ்களையும் அவர் ஒப்படைத்துள்ளதாக தெரிகிறது. இது மட்டுமின்றி, உயர்ரக போதை பொருட்களை உபயோகப்படுத்தும் அளவிற்கு உடல்நிலை தனக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதன்படி, தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர்.