கோவை மாநகரில் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற அடுத்தடுத்த கொலை சம்பவங்களுக்கு பிறகு மாநகர போலீசார் ரவுடி கும்பலை சேர்ந்தவர்களை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.
இதுவரை கோவை மாநகரில் நூற்றுக்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யபட்டுள்ளனர். இதனிடையே கடந்த 28-ம் தேதி பெங்களூருவில் வைத்து சுஜிமோகன், அமர்நாத்,பிரவீன், பிரசாந்த்,அஸ்வின்,பிரவீன் ராஜ்,ராஜேஷ் உள்ளிட்ட ஏழு ரவடிகளை போதைபொருட்களுடன் போலீசார் கைது செய்தனர்.
அதில் சுஜிமோகன் மற்றும் அஸ்வின் ஆகியோர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பததால் அவ்விருவரையும் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.
இந்த விசாரணை இன்று முடிவடைந்து இருவரையும் போலீசார் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள விரைவு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இந்த நிலையில் இருவரிடமும் ஐந்து நாட்கள் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது.
அதில் கோவை பந்தைய சாலை காவல்நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றும் ஸ்ரீதர் மற்றும் சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞரான ஆஷிக் உள்ளிட்ட இருவரும் தங்களுக்கு பல்வேறு வகையில் உதவியதாகவும் கஞ்சா கடத்தலில் ஈடுபடும் போது காவல்துறையினர் சோதனை உள்ள இடங்கள் குறித்தும் மாற்று வழியில் செல்வது குறித்தும் ஆலோசனை வழங்கியதாகவும் கூறியுள்ளனர்.
அது மட்டுமின்றி குற்ற வழக்குகளிலிருந்து தப்பிக்க ஏதுவாக எவ்வாறு சம்பவத்தில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர் என காவல்துறை விசாரணை தகவல் வட்டாரம் மூலம் கூறப்படுகின்றது.
மேலும் இருவரும் சுஜிமோகனுக்கு செல்போனில் சாதாரண அழைப்புக்கு பதிலாக வாட்ஸ் ஆப் மூலம் கால் செய்த நிலையில் அந்த அழைப்புகளை சுஜிமோகன் வேறு செல்போனில் பதிவு செய்திருந்ததால் அதனடிப்படையில் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள இன்றியமையா பண்டங்கள் சிறப்பு தனி நீதிமன்றத்தில் நீதிபதி லோகநாதன் முன்பாக ஆஜர்படுத்தினர்.
முன்னதாக நீதிமன்றத்திற்கு வரும்போது வழக்கறிஞர் ஆஷிக் காவல்துறையினர் தன் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தன்னை காவல்துறையினர் அடித்து துன்புருத்தியதாகவும் கூறி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“