தீபாவளி பட்டாசு : தீபாவளி தினத்தன்று பட்டாசுடன் தான் பொழுது விடியும். சுற்றுச் சூழல் மாசடைவதை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம், தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
Advertisment
ஆனால் சிலர் அந்த உத்தரவினையும் மேறி, உச்ச நீதிமன்றம் கொடுத்திருந்த கால அவகாசத்தையும் மீறி பட்டாசுகள் வெடித்தனர். நேற்று காலையில் நெல்லையில் சிறுவர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்தது காவல் துறை.
தீபாவளி பட்டாசு : அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்தவர்கள் கைது
இன்று காலை நிலவரப்படி 700 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் காவல் துறையினர் இவர்களை எச்சரித்து அனுப்பியிருக்கலாம். ஆனால் வழக்கெல்லாம் ஏன் பதிவு செய்தார்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் பொதுமக்கள்.
மதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ இந்த நடவடிக்கைகள் குறித்து பேசிய போது “அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்தவர்களை கைது செய்வது, வழக்கு பதிவு செய்வது தவறானது. கண்டித்து அனுப்பியிருக்கலாம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பால கிருஷ்ணனும் இந்த நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார்.
ஒரு புறம் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தாலும், மற்றொரு பக்கம் இந்த கட்டுப்பாட்டினால் மாசு மற்றும் பட்டாசுக் குப்பைகள் பெரும் அளவில் குறைந்துள்ளன. சென்னையில் மட்டும் கடந்த ஆண்டினை விட 40 டன் குறைவான அளவிற்கு பட்டாசுக் குப்பைகள் குறைவாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.