/indian-express-tamil/media/media_files/2025/03/25/oDmsFB9mI0ht8E2XfmgC.jpg)
தமிழ்நாட்டில் ராமராதபுரம், மதுரை மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிக்கையை தமிழ்நாடு அரசின் அரசின் கூடுதல் முதன்மைச் செயலர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, நெல்லை டி.ஐ.ஜி-யாக இருந்த பா. மூர்த்தி ஐ.பி.எஸ், ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை டி.ஐ.ஜி-யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் டி.ஐ.ஜி-யாக இருந்த அபினவ் குமார் ஐ.பி.எஸ், மதுரை மண்டல டி.ஐ.ஜி-யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இது தவிர காலியாக இருந்த சென்னை மாநகர காவல் உளவுப் பிரிவு 1-ன் துணை ஆணையராக, ஆர். சக்திவேல் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னதாக சென்னை வண்ணாரப்பேட்டை காவல்துறை துணை ஆணையராக பொறுப்பு வகித்தார்.
சென்னை மயிலாப்பூர் துணை ஆணையராக இருந்த ஹரிகிரண் பிரசாத், சென்னை காவல்துறையின் நலப்பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், சென்னை வண்ணாரப்பேட்டை காவல்துறை துணை ஆணையராக வி. பாஸ்கரன் ஐ.பி.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், நெல்லை சரக டி.ஐ.ஜி-யாக சந்தோஷி ஹதிமானி ஐ.பி.எஸ் பொறுப்பு வகிக்கிறார்.
ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக ஏ. சுஜாதா நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சி.பி.சி.ஐ.டி காவல்துறையின் வடக்கு மண்டல காவல்துறை கண்காணிப்பாளராக ஜி. ஜவகர் ஐ.பி.எஸ் மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை மயிலாப்பூரின் துணை ஆணையராக வி. கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சியின் கிழக்கு மற்றும் போக்குவரத்துத் துறை துணை ஆணையராக எஸ். மேகலினா ஐடன் பொறுப்பு வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நெல்லை மாவட்டத்தில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இந்த பணியிட மாற்றம் தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு காவல்துறை வட்டாரங்கள் இடையே பேசுபொருளாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.