பேராசிரியர் காமராஜ் என்பவர் தனது மகள்கள் ஈஷா யோகா மையத்தில் இருக்கின்ற நிலையில், அவர்களை சந்திக்க ஈஷா மையம் அனுமதி மறுப்பதாக தெரிவித்து, ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், தன் மகள்கள் இருவரும் ஈசா யோகா மையத்தில் துறவியாக மாற்றுவதாகவும், உறவினர்களை சந்திக்க அனுமதி மறுப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், ஈஷா யோகா மையத்தில் பல்வேறு குற்ற சம்பவம் நடப்பதாக கூறிய அவர் மருத்துவர் ஒருவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.
குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் மற்றும் வழக்கறிஞர் தெரிவித்ததைடுத்து நீதிபதிகள் விரிவாக விசாரணை செய்தனர். ஈஷா மையத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் தன்மை , நீதிமன்றத்தில் ஆஜரான இரு பெண்களின் பேசிய விதத்தை பார்க்கும் போது, குற்றச்சாட்டுகளின் பின்னணியில் உள்ள உண்மை தன்மை தெரிந்து கொள்ள விரிவாக விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஈஷா மையத்துக்கு எதிராக பதிவான குற்ற வழக்குகளின் விவரங்கள், மனுதாரரும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞரும் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி தெரிவித்தார். ஈசா யோகா மையத்துக்கு எதிரான வழக்குகளை கைவிடும் வரை இளைய மகள் லதா சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக , மனுதாரர் ஆன காமராஜருக்கு மொபைல் போனின் வாயிலாக மூத்த மகள் கீதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி கார்த்திகேயன் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் இன்று (அக்.1) அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“