வேங்கைவயல் விவகாரத்தில் பட்டியலினத்தவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி பதற்றமாக காட்சியளிக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பு இருக்கும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவம், கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தெரிய வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று (ஜன 24) சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, வழக்கின் விசாரணை நிறைவடைந்து முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக கடந்த ஜனவரி 20-ஆம் தேதி புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக இந்த விவகாரம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக் கோரிய மனு மீதான விசாரணை மார்ச் 27-ஆம் தேதி நடைபெறும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால், இந்த குற்றப்பத்திரிகையின் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் முறையாக விசாரிக்காமல் பாதிக்கப்பட்ட மக்களை குற்றவாளிகளாக சித்தரித்துள்ளதாகவும் விடுதலை சிறித்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்டோர் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், வேங்கைவயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட வேண்டும் என சமூக வலைதளங்கள் மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே, கடந்த 2 ஆண்டுகளாக வேங்கைவயல் கிராமத்தில் 6 சோதனை சாவடிகள் அமைத்து ஊருக்குள் நுழைபவர்களை போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
உண்ணாவிரத போராட்டத்தின் எதிரொலியாக மேலும் மூன்று சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தற்போது போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அப்பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் வேங்கைவயல் கிராமம் பரபரப்பாக காணப்படுகிறது.
வேங்கை வயலில் வெளி ஆட்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனுமதியை மீறி உள்ளே செல்ல முயன்ற விசிகவினர் 2 பேரை போலீசார் கைது செய்தனர். பொதுமக்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.