நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் சசிகுமாரின் அத்தை மகன் அசோக் குமார். மதுரையை சொந்த ஊராகக் கொண்ட இவர், சசிகுமாரின் கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிர்வாகியாகவும், இணை தயாரிப்பாளராகவும் இருந்தார். கடந்த வாரம் 21-ஆம் தேதி வளசரவாக்கத்தில் திடீரென அசோக் குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அசோக் குமார் எழுதிய கடிதத்தில், ‘மதுரை அன்புச்செழியனிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக போலீஸில் புகார் அளித்தார் சசிகுமார். வளசரவாக்கம் போலீஸார், அன்புச்செழியன் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக 306 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனிடையே, காவல்துறையினர் தேடுவதை அறிந்த அன்புச் செழியன் தலைமறைவாகிவிட்டார். இருப்பினும், அவரை பிடிப்பதற்காக மூன்று தனிப்படைகளை அமைத்துள்ள போலீசார், அன்புச் செழியன் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதை தடுப்பதற்காக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும், அன்புச் செழியன் பதுங்கியிருக்கும் இடத்தை கண்டு பிடிப்பதற்காக அவரின் நண்பரான முத்துக்குமாரை பிடித்து விசாரித்துவரும் போலீசார், இன்று தி.நகரில் உள்ள அன்புச் செழியன் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கந்துவட்டி தொடர்பான ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.