தமிழ்நாடு-புதுச்சேரி முழு அடைப்பு : தலைவர்கள் கைது, பஸ்கள் உடைப்பு, தீக்குளிப்பு முயற்சி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம். போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

By: Updated: April 5, 2018, 03:42:53 PM

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து திமுக சார்பில் இன்று அனைத்துக்கட்சியின் சார்பிலும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி நடவடிக்கை எடுக்காத மத்திய அரசி கண்டித்து நடைபெறும் இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.

ஏப் 1ம் தேதி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அரசி கண்டித்து போராட்டங்கள் நடத்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஏப். 5 (இன்று) தமிழ்நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தப் போராட்டத்திற்கு தோழமை கட்சிகள், அனைத்து விவசாயிகள் சங்கம், வணிகர் சங்கம் மற்றும் போக்குவரத்து துறையினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பேருந்துகளின் ஓட்டம் எண்ணிக்கை இன்று குறைவாக காணப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை சந்தித்து ஆதரவு கோரினார். இதற்கு ஆதரவு தெரிவித்த நாராயணசாமி, புதுச்சேரியிலும் இன்று முழு அடைப்பு நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இதனையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் முழு அடைப்பு நடைபெறும்.

முழு அடைப்பு போராட்டம் மட்டுமின்றி ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டங்களும் இன்று நடைபெற உள்ளது. போராட்டத்தின்போது கலவரம் எதுவும் நடைபெறாமல் இருக்கத் தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரித்துள்ளது.மேலும் ஏப்.7 தேதி அனைத்துக்கட்சி கூட்டணியின் ஆதரவுடன் திமுக சார்பில் திருச்சியில் காவிரி உரிமை மீட்பு பயணம் துவங்குகிறது. இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தின் LIVE UPDATE:

மாலை 3.30 : சென்னையில் கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

பிற்பகல் 2.30 : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தில் கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கேட்டுக்கொண்டார்.

பிற்பகல் 2.15 : காவிரி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து வரும் 9-ம் தேதி மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறினார்.

பிற்பகல் 2.00 : கோவை, சரவணம்பட்டி பகுதியில் 3 அரசுப் பேருந்துகள் உட்பட 4 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

பகல் 1.30 : அரியலூர் ரயில் நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தலைமையில், திமுகவினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

பகல் 12.35 : அமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டியில், ‘காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடுகிறார்’ என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், போராட்டத்தின்போது நடந்த கல்வீச்சு சம்பவம் குறித்து ‘கல் எறியும் காலத்திலா திமுக உள்ளது?’ என கேள்வி எழுப்பினார்.

பகல் 12.30 : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என வலியுறுத்தி, வரும் 12-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு நடைபெறும் என கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளன.

பகல் 12.20 : இன்று முழு அடைப்பைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க இன்றே(ஏப்ரல் 5) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கூறியிருந்தார்.

ஆனால் இன்று தோழமைக் கட்சித் தலைவர்கள் பலரும் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டுவிட்டதால், அனைத்துக் கட்சிக் கூட்டம் நாளை (ஏப்ரல் 6) காலையில் நடைபெறும் என இன்று அறிவித்தார்.

பகல் 12.15 : புதுச்சேரியில் பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடிய திமுக எம்.எல்.ஏ சிவாவின் கார் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது அவரது ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பகல் 12.10 : சென்னை, காமராஜர் சாலையில் மறியலில் ஈடுபட்டு கைதான திமுக செயல்தலைவர் ஸ்டாலின், கி.வீரமணி, திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்டோர் புரசைவாக்கத்தில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

பகல் 12.00 : வாணியம்பாடி ரயில் நிலையத்தில், சென்னையிலிருந்து பெங்களூரு சென்ற டபுள் டக்கர் மற்றும் பிருந்தாவன் விரைவு ரயிலை மறித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

காலை 11.45 : வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே சித்தூரில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடியை மர்மநபர்கள் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காலை 11.30 : உளுந்தூர்பேட்டை போராட்டத்தின்போது, அரசுப் பேருந்தை நிறுத்தி டயரிலிருந்த காற்றை வெளியேற்றியதாக திமுகவினர் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

காலை 11.25 : தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசினார். பிறகு நிருபர்களிடம் பேசிய தமிழிசை, ‘காவிரி விவகாரத்தில் போராட்டம் வன்முறையாக மாறக் கூடாது’ என்றார்.

காலை 11.20 : திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறுகையில், ‘காவல்துறையை வைத்து தாக்கினாலும் சரி, துப்பாக்கியால் சுட்டாலும் சரி போராட்டம் ஓயாது. பாலுக்கு காவல், பூனைக்கு தோழன் என்பது போல் தமிழக அரசு உள்ளது. மத்திய அரசுக்கு காவலாகவும் எங்களுக்கு பூனையாகவும் இருக்கிறார் முதலமைச்சர்’ என கூறினார்.

காலை 11.15 : சென்னை மெரினாவில் மு.க.ஸ்டாலினை கைது செய்த போது கல்வீசித் தாக்கியதில் காவல்துறை அதிகாரி குமாரின் மண்டை உடைந்தது. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

காலை 11.10 : சென்னை மெரினாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்ட போலீஸ் வாகனத்தின் மீது திமுக தொண்டர்கள் பலர் கட்சிக் கொடிகளுடன் ஏறி நின்று கோஷமிட்டனர். ஸ்டாலினை ஏற்றியபடி மெதுவாக புறப்பட்ட அந்த வாகனம், எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் நோக்கி சென்றது.

காலை 11.05 : ஈரோடு ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்தின் போது தீக்குளிக்க முயன்ற திமுக தொண்டர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

காலை 11.00 : காவிரி மேலாண்மை வாரியம் கோரி திருவாரூரில் பேரணி சென்றபோது, திமுக தொண்டர் மோகன் தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனால் அங்கு தொண்டர்கள் இடையே பதற்றம் ஏற்பட்டது.

காலை 10.55 : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, மதுரை ரயில் நிலையத்தில் ரயில் மீது ஏறி திமுக உள்ளிட்ட கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

காலை 10.55 : காவிரி தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி புதுச்சேரி அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர புதுச்சேரி ஆளுனர் கிரண்பேடி உடன்படாததால் இந்த நடவடிக்கையை புதுச்சேரி அரசு எடுத்துள்ளது.

காலை 10.50 : சென்னை மெரினா கடற்கரைக்குள் திமுக.வினர் நுழையாமல் தடுப்பதில் போலீஸார் தீவிரம் காட்டினர். உடனே திமுக.வினரில் ஒரு பகுதியினர் கோட்டையை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அவர்களை தடுத்து நிறுத்த போலீஸார் மும்முரமாக பின் தொடர்கிறார்கள்.

cauvery Issue, Cauvery Management Board, Marina Protest, MK Stalin, TN Bandh சென்னையில் ஸ்டாலின் மறியல்

காலை 10.45 : சென்னை மெரினாவில் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை கைதுசெய்து அழைத்துசெல்லும் போலீஸ் வாகனத்தை திமுக தொண்டர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காலை 10.45 : திருச்சி, புள்ளம்பாடி ரயில் நிலையத்தில், சென்னையிலிருந்து திருச்சி சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்துகின்றனர்.

காலை 10.45 : சென்னை மெரினாவில் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட கி.வீரமணி, திருநாவுக்கரசர், திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

காலை 10.35 : சென்னை மெரினா கடற்கரையை கைப்பற்றி, அங்கு நிரந்தரமாக போராட்டக் களம் அமைக்கவே மெரினாவை நோக்கி ஸ்டாலின் பயணித்ததாக கூறப்படுகிறது. இதை முன்கூட்டியே அறிந்து போலீஸார், மெரினாவுக்குள் நுழைய விடாமல் தடுத்து நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். ஆனாலும் இன்னும் அங்கு திரண்டிருக்கும் ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு மெரினாவில் நுழைவதே இலக்காக இருப்பதாக தெரிகிறது.

காலை 10.30 மணி : கோவையில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காலை 10.20 : கைதாகும் முன்பு மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில், ‘காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து செவிசாய்க்காத காரணத்தால் தான் போராட்டம் நடத்துகிறோம். மத்திய அரசு செவி சாய்க்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும். காவிரி விவகாரத்தில் அதிமுகவுடன் இணைந்து போராட திமுக தயார்’ என குறிப்பிட்டார்.

காலை 10.20 மணி : மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலினை போக்குவரத்து போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்றனர். அவரை போலீஸ் வேனில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து திமுக தொண்டர்கள் போலீசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். கூட்டணி கட்சியினரும் கைது செய்யப்பட்டனர்.

cauvery Issue, Cauvery Management Board, Marina Protest, MK Stalin, TN Bandh சென்னை மெரினாவில் திரண்ட திமுக கூட்டணி கட்சியினர்

காலை 10.30 மணி : சென்னை மெரினா கடற்கரையில் கூடியிருக்கும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினரை கைது செய்ய கூடுதல் போலீஸ் படை குவிப்பு.

காலை 10.15 மணி : பூங்கா நகர் ரயில் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடந்து வருகிறது. புறநகர் ரயில்கள் பாதியில் நிறுத்தம். அரை மணி நேரமாக புறநகர் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

காலை 10.10 மணி : போலீஸ் தடையையும் மீறி அண்ணா சமாதியை ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சியினர் சென்றடைந்தனர். அங்கு சாலை மறியலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

cauvery Issue, Cauvery Management Board, Marina Protest, MK Stalin, TN Bandh சென்னையில் திமுக கூட்டணி கட்சியினர் மறியல்

காலை 10.00 மணி : வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி சாலை சந்திப்பில் போலீசார் தடுப்பு அமைத்து பேரணியை தடுக்க முயன்றனர். அப்போது போலீசாருக்கும் போராட்டகாரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

காலை 9.50 மணி : அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்டிருந்த திமுக கூட்டணி கட்சியினர் திடீரென, தடுப்பு வேலிகளைத் தாண்டி வாலாஜா சாலையில் மெரினா கடற்கரை நோக்கி பேரணியாக சென்று கொண்டு இருக்கிறார்கள். காமராஜர் சாலையில் முதல்வர், அமைச்சர்கள், நீதிபதிகள் செல்லும் பாதை எப்பதால் போலீசார் பதற்றத்துடன் காணப்படுகிறார்கள்.

காலை 9.45 மணி : புதுவையில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியின் சார்பாக கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராடி வருகின்றனர்.

காலை 9.35 மணி : திமுக செயல்தலைவர் ஸ்டாலின், அண்ணாசாலையில் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்து சேர்ந்தார்.

காலை 9.30 மணி : காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர் போராட்ட இடத்துக்கு வந்து சேர்ந்தார்.

காலை 9.15 மணி : திருச்சியில் மத்திய தபால் அலுவலகம் முன்பு திமுக கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை 9 மணி : சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலை அருகே திமுக கூட்டணி கட்சியினர் திரள ஆரம்பித்துள்ளனர். திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்னும் சிறிது நேரத்தில் அங்கு வர உள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Police security enforced in tamil nadu and puducherry for bandh

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X