/indian-express-tamil/media/media_files/2025/03/20/JaW385NHurg4rrJBR3DH.jpg)
கடலுார் மாவட்டம் சிதம்பரம் சத்திரப்பாடியில் போலீசாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற குமரி மாவட்ட கொள்ளையன் ஸ்டீபன் சுட்டுப் பிடிக்கப்பட்டார். திருட்டு குறித்து விசாரிக்கச் சென்றபோது இச்சம்பவம் நடந்துள்ளது. இவர் மீது 25-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் போலீஸார் துப்பாக்கியால் சுட்டு குற்றவாளியை கைது செய்த சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த முழு விபரம் வருமாறு;
கடலூர் மாவட்டம் அண்ணாமலைநகர் காவல் நிலையம் சரகத்தில் கடந்த 18.03.2025ம் தேதி வல்லம்படுகை கஜேந்திரன் என்பவரது வீட்டில் கன்னக்களவு செய்தது சம்பந்தமாக அண்ணாமலைநகர் காவல் நிலைய குற்ற எண் 47/2025 U/S 331(3), 305(a), BNS ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்படி சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர் லாமேக் மேற்பார்வையில், அண்ணாமலைநகர் காவல் நிலைய ஆய்வாளர் அம்பேத்கார் தலைமையிலான போலீசார் நேற்று அண்ணாமலை நகர் ஓபி மெயின் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
இந்த சோதனையில் சிக்காமல் இருக்க பைக்கில் வேகமாக சென்ற வாலிபரை அம்பேத்கார் தலைமையிலான போலீஸார் மடக்கிப்பிடித்து சோதனை செய்தபோது வல்லம்படுகை கஜேந்திரன் என்பவரின் வீட்டில் திருடிய நகைகளுடன் தப்பிச்செல்ல முயன்ற நபர் என்பதும், இந்தக் குற்றச் சம்பவத்தில் கண்காணிப்பு சிசிடிவி கேமராவில் பதிந்திருந்த சிவப்பு கலர் சட்டை, ஹெல்மெட்டுடன் வந்த நபரின் அடையாளத்துடன் ஒத்துப்போனதால், பிடிபட்டவரை அம்பேத்கார் தலைமையிலான போலீஸார் தீவிரமாக விசாரணை செய்ததில், மேற்படி நபர் இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி என்பதும், இவர் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் என்பது தெரியவந்தது.
மேலும், கடந்த 18-ம் தேதி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அவரிடமிருந்து குற்ற எண் 47/2025 குற்ற வழக்கில் களவாடப்பட்ட 10.5 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டது. மேலும் விசாரணை மேற்கொண்டதில் கன்னக்களவுக்கு பயன்படுத்திய இரும்பு ராடு சித்தலாப்பாடி ஒத்தை பனை மரம் அருகே புதரில் மறைத்து வைத்திருப்பதாகக் கூறியதின் பேரில் இன்று காலை குற்றவாளியான ஸ்டீபனை காவல் ஆய்வாளர் அம்பேத்கார் மற்றும் போலீசார் வழக்குக்கு தொடர்பான ஆவணங்களை கைப்பற்ற அழைத்துச்சென்றபோது, சித்தலாப்பாடி ஒத்தை பனை மரம் அருகில் உள்ள புதரில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முதல் நிலை காவலர் ஞானபிரகாசம் என்பவரின் வலது கையில் வெட்டி விட்டு, தப்ப முயன்றபோது காவல் ஆய்வாளர் அம்பேத்கார் தொடர்ந்து தடுக்கும் முயற்சியில் ஈடுபட அவரையும் தாக்கி விட்டு நகைகளுடன் தப்ப முயன்றார்.
இதனையடுத்து தற்காப்பிற்காக குற்றவாளி ஸ்டீபன் என்பவரின் வலது காலில் துப்பாக்கியால் சுட்டு வளைத்து பிடித்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்கு கொண்டு சேர்த்தனர் ஆய்வாளர் அம்பேத்கார் தலைமையிலான போலீஸார். நகைகளை கொள்ளையடித்த குற்றவாளி மற்றும் தாக்குதலுக்கு உள்ளான காவலர் ஆகியோருக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்தினை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார். ஸ்டீபன் என்பவரின் மீது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருச்சி, தஞ்சாவூர், திருப்பூர் நகரம், திருப்பூர், சிவகங்கை, நாமக்கல், ஈரோடு, கடலூர் ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் கேரளாவிலும் 30க்கும் மேற்பட்ட வழிப்பறி, திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளன என்பது தெரியவந்துள்ளது.
நேற்று முதல் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும், குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் சுட்டுப் பிடிக்கப்பட்டு வருகின்றனர். திருநெல்வேலியில் நிலப்பிரச்சனை காரணமாக ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முகமது தொஃபிக் என்பவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். நேற்று சேலத்தைச்சேர்ந்த சரித்திரப்பதிவேடு குற்றவாளி ஜான் என்பவரை ஈரோட்டில் கொலை செய்த சம்பவத்தில் கொலைக்குற்றவாளிகள் 3 பேரை போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர்.
அதேபோல், இன்று சித்தலாப்பாடியில் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி ஒருவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்திருக்கும் சம்பவம் ரௌடிசம் செய்பவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. சில மாதங்களாக தத்தம் துப்பாக்கிகளை பயன்படுத்தாதா காவல் ஆய்வாளர்களுக்கு முழுசுதந்திரம் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் தற்போது தப்ப நினைக்கும் குற்றவாளிகள் மீது துப்பாக்கி குண்டுகள் தாக்கத்துவங்கியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.