சென்னையில் பதுங்கியிருந்த பிரபல ரவுடியும், கூலிப் படை கும்பலின் தலைவனுமான ஹைகோர்ட் மகாராஜவை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானம் அருகே தனிப்படை போலீஸார் ரவுடியின் காலில் சுட்டிப் பிடித்தனர். தற்போது ரவுடிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் ஆதம்பாக்கம், வேளச்சேரி அருகே ஒரு ரவுடி கும்பல், நகைக்கடை அதிபரின் மகனை கடத்தி பணம் பறிக்கத் திட்டமிட்டிருந்தது. இதுகுறித்து தனிப்படை போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், தூத்துக்குடியைச் சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அளித்த வாக்குமூலத்தின் பேரில் தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடியும், கூலிப் படை கும்பலின் தலைவனுமான ஹைகோர்ட் மகாராஜாவை தற்போது போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர்.
கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானம் அருகே போலீஸாரின் பிடியில் இருந்து அவர்களைத் தாக்கிவிட்டு ரவுடி மகாராஜா தப்ப முயன்றுள்ளார். இதையடுத்து, போலீஸார் தற்காப்புக்காக ரவுடியின் காலில் துப்பாக்கியால் சுட்டு அவரை பிடித்ததாக தெரிவித்துள்ளனர்.
தற்போது அருகில் உள்ள மருத்துவமனையில் ஹைகோர்ட் மகாராஜா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் என ஏற்கனவே 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.