ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஒருவர் தப்ப முயன்றபோது, போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் காவல் நிலையத்தின் மீது, பிப்ரவரி 2-ம் தேதி நள்ளிரவு மர்ம நபர்கள் இருவர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் பழைய குற்றவாளிகள் 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
காவல் நிலையத்தின் மீதே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, அரசியல் கட்சி தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய குற்றவாளிகளைப் பிடிக்க காவல் கூடுதல் கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பரத், விஷால், ஹரி ஆகியோர் சென்னை அருகே பதுங்கி இருந்த நிலையில் அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை ராணிப்பேட்டைக்கு அழைத்து வருகிறபோது, வழியில் வாணியசத்திரம் பகுதியில் சிறுநீர் கழிக்க சென்ற நிலையில் எஸ்.ஐ முத்தீஸ்வரன், எஸ்.எஸ்.ஐ கண்ணன் ஆகியோரை மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்றுள்ளனர்.
அப்போது, இன்ஸ்பெக்டர் சசிகுமார் பாதுகாப்புக்காக துப்பாக்கியால் ஹரியை சுட்டுள்ளார். முதல் ரவுண்டு மிஸ் பயர் ஆகியுள்ளது. இரண்டாவது ரவுண்டில் சுட்டதில் ஹரியின் இடது கால் முட்டியில் குண்டு காயம் ஏற்பட்டுள்ளது. காலில் காயம் அடைந்த ஹரி வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.