சென்னை தியாகாரயநகரில் உள்ள விஸ்வ ஹிந்து பரிஷத் தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.எஸ்.ஐ துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தியாகராயநகரில் உள்ள ராமானுஜம் தெருவில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைமை அலுவலகம் உள்ளது. தமிழக விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவராக வேதாந்தம் என்பவர் தலைவராக உள்ளார்.
விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தலைவர் வேதாந்தத்துக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் எஸ்.எஸ்.ஐ சேகர்(47). சிறப்பு எஸ்.ஐ.யான சேகர் வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்தவர். இவருக்கு திருமணமாகி 14வயதில் ஒரு மகளும் 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
எஸ்.எஸ்.ஐ சேகர் கடந்த 2 ஆண்டுகளாக விஸ்வ ஹிந்து பரிஷத் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த அலுவலகத்திற்கு பின்புறம், பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் ஓய்வு எடுப்பதற்காக ஒரு அறை ஊள்ளது. நேற்று மாலை, விஸ்வ ஹிந்து பரிஷத் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள ஒய்வு அறைக்குச் சென்ற எஸ்.எஸ்.ஐ சேகர் தனது துப்பாக்கியால் நெற்றிப்போட்டில் வைத்து சுட்டுக்கொண்டார். இதனால், சம்பவ இடத்திலேயே எஸ்.எஸ்.ஐ சேகர் உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சத்தம் கேட்டு அங்கே இருந்த அலுவலக ஊழியர்கள் சென்று பார்த்தபோது அங்கே எஸ்.எஸ்.ஐ சேகர் நெற்றிப்போட்டில் சுடப்பட்டு இறந்து கிடந்தார். இதையடுத்து, மாம்பலம் போலீஸுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார், அவருடைய உடலைக் கைப்பற்றி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைத்தனர். பின்னர், எஸ்.எஸ்.ஐ சேகர் சுட்டுக்கொண்ட துப்பாக்கியைக் கைப்பற்றினர். மேலும், அந்த இடத்தில் சேகர் தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதத்தையும் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், சேகர் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.எஸ்.ஐ சேகர் வீடு கட்ட 25 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகவும் அந்த கடனை அடைக்க முடியாமல் இருந்துள்ளார். இனிமேலும், அந்த கடனை அடைக்க முடியாமல் போய்விடுமோ என்று சேகர் கவலையிலும் மன உளைச்சலிலும் இருந்துள்ளார். அதனால், தற்கொலை செய்துகொள்வதாக குறிப்பிட்டுள்ளார். சேகர் தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதத்தின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விஸ்வ ஹிந்து பரிஷத் அலுவலக ஊழியர்களிடமும் எஸ்.எஸ்.ஐ. சேகரி தற்கொலை பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"