க.சண்முகவடிவேல்
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் தமிழகத்தில் உள்ள காவிரி-கொள்ளிடம் கரையோரப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றது.
பல ஆயிரக்கணக்கான ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழை, கரும்பு பயிர்கள் நீரால் சூழப்பட்டு கரையோரப்பகுதி விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்தநிலையில், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரும் தஞ்சை மண்டல திமுக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி சில தினங்களுக்கு முன்பு காவிரி-கொள்ளிடம் ஆற்றின் கரையில் வெள்ள தடுப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமது ஆய்வுப் பணியை திருச்சி-தஞ்சை மாவட்டங்களின் எல்லையில் உள்ள கல்லணையில் துவங்கி கொள்ளிட ஆற்றின் கரையின் வழியாகவே 81 கி.மீ. பயணித்து மதகு சாலை வரை 21 ஊராட்சிகளில் தனது ஆய்வினை மேற்கொண்டார்.
தஞ்சை-கும்பகோணம்-காவிரி மற்றும் கொள்ளிட கரையோர பகுதிகளில் பட்டுக்குடி, கோவிந்தநாட்டுச்சேரி கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்திருப்பதை தொடர்ந்து அவரே ஒலிபெருக்கி பிடித்து பொதுமக்களுக்கு நேரடியாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தார்.
மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குவதற்காக செய்திருக்கக்கூடிய ஏற்பாடுகளை அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார். மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தினார். சிறப்பு மருத்துவ முகாம்கள், தீயணைப்பு வீரர்கள், தற்காலிக உணவு கூடங்களை ஆய்வு செய்து, ஆற்றின் கரையோரம் செல்ல வேண்டாம் என மக்களுக்கும் எச்சரிக்கை விடுத்தார்.
இந்தநிலையில் திருவிடைமருதூர் அருகே அணைக்கரை கொள்ளிடக்கரையில் அமைச்சர் ஆய்வின்போது, எதிரே வந்த ஆம்புலன்ஸ் ஒன்று போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. அமைச்சர் கார், அவரை தொடர்ந்து சுமார் 20-க்கும் மேற்பட்ட திமுக பிரமுகர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் வாகனங்கள் சென்ற பிறகே ஆம்புலன்ஸ் செல்ல அனுமதிக்கப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆம்புலன்ஸ் தடுத்து நிறுத்தப்பட்டதை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டிருப்பது தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து, அப்பகுதியினர் தெரிவிக்கையில், ஆய்வுக்கு அமைச்சர் வந்தாரா? அல்லது உயிருக்கு ஆபத்தான நிலையில் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்த அமைச்சர் வந்தாரா? எனத் தெரியவில்லை.
ஆம்புலன்ஸ் வாகனம் சாலையில் சைரன் ஒலித்தபடி வந்தால் அப்போது யாராக இருந்தாலும் ஆம்புலன்ஸ்க்கு வழி விடவேண்டும். அந்த பகுதியில் உள்ள போலீஸார் உடனடியாக போக்குவரத்தை நிறுத்தி ஆம்புலன்ஸ்க்கு பாதை உருவாக்க வேண்டும் என்பதுதான் விதி.
இந்த விதிகளை அமைச்சர் மீறி வருகிறார். அமைச்சர் வருகின்றார் எனச் சொல்லி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவரை சுமந்து செல்லும் ஆம்புலன்ஸ்ஸையே பாதுகாப்பு கருதி போலீஸார் நிறுத்தியது என்பது வேதனை. இந்த நேர இடைவெளியால் ஆம்புலன்ஸில் சென்ற நோயாளி உயிரிழந்தால் இதற்கு யார் பொறுப்பேற்பது அமைச்சரா? அதிகாரிகளா? என்று கேள்வி எழுப்பினர்.
அதேநேரம் அப்பகுதியை சேர்ந்த காவல்துறையினர் தெரிவிக்கையில், அணைக்கரையில் இருந்து கொள்ளிடக்கரை சாலை குறுகிய சாலை, கொள்ளிடத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து வேறு செல்கிறது. அமைச்சர் வந்த சாலை மிகவும் குறுகலான சாலை என்பதால் அமைச்சரின் கார் அருகே வந்துவிட்டபடியாலும் சிறிது நேரம் அனைவரது பாதுகாப்பும் கருதியே ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
கொள்ளிடக்கரையில் ஆம்புலன்ஸ் சென்றால் அமைச்சர் மற்றும் அதனைத்தொடர்ந்து வரும் வாகனங்களினால் ஏதாவது விபத்து ஏற்பட்டால் வாகனம் ஆற்றுக்குள்தான் பாயும் நிலை. மேலும், ஆம்புலன்ஸ் வந்த அதே நேரத்திலேயே அமைச்சரின் காரும் அந்த வலைவான பகுதிக்கு வந்ததால் தான் ஆம்புலன்ஸ் பயணம் சிறிது நேரம் தடைபட்டது. அமைச்சர் கார் கடந்த நொடியே ஆம்புலன்ஸும் கடந்து சென்றது. வேண்டுமென்றே அரசியலாக்கவே இந்த ஆம்புலன்ஸ் விவகாரத்தை இப்போது சமூக ஊடகங்களி வெளியிட்டு அரசியல் செய்கின்றனர் என்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.