தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசியது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் விசாரணைக்கு சீமான் ஆஜராகாத நிலையில் அவரது வீட்டுக்கு வடலூர் மற்றும் ஈரோடு போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
தந்தை பெரியார், தமிழ் மொழியை இழிவுபடுத்தினார்; தமிழர்களை சூத்திர மக்கள் என்று அவமானப்படுத்தினார்; திருமணமான பெண்களை யாருடனும் உறவு வைத்து கொள்ளலாம் என பேசி தமிழ்ச் சமூகத்தை சீரழித்தார் என்றெல்லாம் சீமான் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் 100க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இதில் சீமானை வடலூர் போலீசார் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் இந்த விசாரணைக்கு சீமான் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.
இதேபோல ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் சீமான் அவதூறு பிரசாரம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் பெரியார் தொண்டர்கள் மீது வெடிகுண்டு வீசுவேன் என கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாகவும் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இப்படியாக பேசி சீமான் தொடர் சர்ச்சைகளில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டுக்கு இன்று வடலூர், ஈரோடு போலீசார் விசாரணைக்காக சென்றனர். ஆனால் சீமான் வீட்டில் இல்லாததால் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனிடையே சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், கைது குறித்த எழுப்பிய கேள்விக்கு, "எனக்கு எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. என்னை கைது செய்வது தொடர்பாக எல்லோரும் ஆர்வமாக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். இதில் எனக்கு எதுவும் இல்லை.இது ஒன்றும் புதியதும் அல்ல" என அலட்சியமாக பதிலளித்தார்.
முன்னதாக தமது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "தம் மீதான அனைத்து வழக்குகளையும் ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்க கோரி வழக்கு தொடர்ந்துள்ளோம்; அதற்குள் இந்த சம்மன்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நீதிமன்றத்துக்கும் என்னை அலையவிட நினைக்கின்றனர். யாருக்கு நெருக்கடி? யார் யாரை பார்த்து அச்சப்படுகின்றனர்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்" என்றார்.
போலீசார் சீமான் வீட்டில் விசாரித்து வரும் நிலையில் இதனால் அவர் கைது செய்யப்படுவாரா? என்ற தகவலும் பரவி வருகிறது.