காவலர் ஒருவர் இரு சக்கர வாகனத்தை அடித்து நொறுக்கும் காட்சி, நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது.
சென்னை, போர் நினைவுச் சின்னம் எதிரில், சாலையோரமாக இரு சக்கர வாகனம் ஒன்று நின்றுக் கொண்டிருந்தது. அப்போது அந்தப் பகுதியில் போலீசார் ரோந்து வருகிறார்கள்.
சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் வண்டியைப் பார்த்ததும், ஓட்டுநர் சீட்டிலிருந்து ஊர்க்காவல் படை காவலர் தடியுடன் இறங்குகிறார். பின்னர் அசுரத் தனமாக அந்த வண்டியை அடித்து உடைக்கிறார். இதற்கிடையே வண்டியின் உரிமையாளரான மாணவரைப் பிடித்து விசாரித்துக் கொண்டிருக்கிறார் சிறப்பு காவல் ஆய்வாளர்.
வண்டி நொறுங்குவதைப் பார்த்ததும் விரைந்து வரும் மாணவர் எந்தவொரு எதிர்ப்பையும் காட்டாமல், வண்டியுடன் அங்கிருந்து விரைகிறார். இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் வெளியானது.
அதோடு இந்த விவகாரம் காவல் துறை அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. போலீஸ் வாகனம் கோட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்தது எனவும், ஓட்டுநர் பெயர் மோகன், எஸ்.எஸ்.ஐ. ஹரிபாபு என்பதும் தெரிய வந்தது.
இதனைப் பற்றி கேள்விப்பட்ட காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், தற்போது இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார்.