ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அடுத்த சித்திரங்குடியைச் சேர்ந்தவர் தங்கவேல், இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளனர். இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு மின் விபத்தில் ஒரு காலை இழந்தார். இவர் வாழ்வாதாரத்திற்காக அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஜூன் 14-ம் தேதி சித்திரங்குடிக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் திருவிழா பாதுகாப்புக்காக வந்த பேரையூர் காவல்நிலைய சி.ஐ.டி லிங்குசாமி என்பவர் தங்கவேலின் பெட்டிக்கடைக்கு வந்துள்ளார். அப்போது, தங்கவேலின் பெட்டிக்கடையில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் லிங்குசாமி விசாரணைக்கு வந்துள்ளார். அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடி ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இந்த மோதலில், பெட்டிக்கடை நடத்தி வரும் தங்கவேலுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. காவலர் லிங்குசாமிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரையூர் காவல் நிலைய போலீஸார், காவலர் லிங்குசாமியை அங்கிருந்து புறப்படச் சொல்லியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அங்கே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருப்பதாகக் கூறியதை அடுத்து, புகாரின் பேரில் காவலர் லிங்குசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, காவலர் லிங்குசாமியை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
காவலரால் தாக்கப்பட்டு கை முறிவு ஏற்பட்டுள்ள மாற்றுத்திறனாளி தங்கவேல், தான் ஏற்கெனவே ஒரு காலை இழந்துள்ள நிலையில், இப்போது கையும் முறிந்துள்ளதால் வேதனையில் உள்ளதாகவும் காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி உத்தரவு பிறப்பித்து, மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.