புத்தாண்டு 2025-ல் உலகெங்கும் அமைதி திரும்பட்டும், நம் நாட்டில் சமூக நல்லிணக்கம் தழைத்துச் செழித்தோங்கட்டும். இல்லந்தோறும் அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்து இருக்கட்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் 2025 ஆங்கிலப் புத்தாண்டைக் கோலாகலமாக கொண்டாடி வரவேற்று வரும் நிலையில், புத்தாண்டு 2025-ல் உலகெங்கும் அமைதி திரும்பட்டும், நம் நாட்டில் சமூக நல்லிணக்கம் தழைத்துச் செழித்தோங்கட்டும். இல்லந்தோறும் அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்து இருக்கட்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, வி.சி.க தலைவர் திருமாவளவன், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
அனைவரும் அற்புதமான ஆரோக்கியம் மற்றும் செழிப்புடன் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் - பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து
இந்திய பிரதமர் நரேந்திர மோடி புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: "இந்த ஆண்டு அனைவருக்கும் புதிய வாய்ப்புகளையும் வெற்றிகளையும் முடிவில்லாத மகிழ்ச்சியையும் வழங்கட்டும்; அனைவரும் அற்புதமான ஆரோக்கியம் மற்றும் செழிப்புடன் ஆசீர்வதிக்கப்பட வேண்டும்" என மக்கள் அனைவருக்கும் 2025 புத்தாண்டு வாழ்த்துக்களை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வாழ்வில் மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், வளத்தையும் கொண்டு வரட்டும் - ஆளுநர்.என். ரவி புத்தாண்டு வாழ்த்து
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: “புத்தாண்டை முன்னிட்டு, அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள். 2025-ம் ஆண்டின் விடியல் புதிய ஆற்றல், வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்தி, நம் வாழ்வில் மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், வளத்தையும் கொண்டு வரட்டும். சமுதாயத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு நம்மை அர்ப்பணித்து நமது தேசத்தின் நிலையான, உள்ளடக்கிய முன்னேற்றத்திற்கு அதிக ஆர்வத்துடன் பங்களிப்பை வழங்குவோம்.” புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகெங்கும் அமைதி திரும்பட்டும்... நாட்டில் சமூக நல்லிணக்கம் தழைத்துச் செழித்தோங்கட்டும் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: “இந்திய ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீட்ட 2024 நிறைவுற்று, புத்தாண்டு 2025 பிறக்கிறது.2024 ஆண்டு தமிழ்நாட்டில் நமது திராவிட மாடல் அரசின் தொடர் சாதனைப் பயணம் புதிய பாய்ச்சல்களை நிகழ்த்திக் காட்டியுள்ளது. இந்தச் சாதனைகளை உச்சிமுகர்ந்து அங்கீகரிக்கிறோம் எனக் கூறும் விதமாகத்தான் 2024 லோக்சபா தேர்தலில் 'நாற்பதுக்கு நாற்பது' என இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வெற்றி மகுடம் சூட்டினர் நம் மக்கள். தமிழ்நாடும். புதுச்சேரியும் அளித்த அந்த மாபெரும் வெற்றிதான் இந்தியாவில் மதச்சார்பின்மைக்கான குரல் இன்னும் உயிர்ப்போடு ஒலித்துக் கொண்டிருக்க- தொடர்ந்து நிலைத்து நிற்க மிக முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. அந்த வகையில் விடுதலை இந்திய வரலாற்றில் ஜனநாயகத்தை பாதுகாத்து- இந்நாட்டின் பெருமையை நிலைநாட்ட, தமிழக மக்கள் அளித்த வெற்றிக்குரிய 2024-ஆம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டாக அமைந்துவிட்டது. சோதனைகள், தடங்கல்களைக் கடந்து சாதனைகள் படைக்கவும். வெற்றி பெறவுமான நம்பிக்கையினையும் உத்வேகத்தினையும் அளித்தது 2024-ஆம் ஆண்டு! புத்தாண்டாகிய 2025-ல் உலகெங்கும் அமைதி திரும்பட்டும். நம் நாட்டில் சமூக நல்லிணக்கம் தழைத்துச் செழித்தோங்கட்டும். இல்லந்தோறும் அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்து இருக்கட்டும். தமிழக அரசிற்கு வழிகாட்டும். அனைவருக்கும் எனது உளம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், " புத்தாண்டு புதிய வெற்றிகளுக்கு வித்திடட்டும்! எங்கும் நலமே சூழட்டும்!" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார்.
அனைவர் வாழ்விலும் அமைதியும் மகிழ்ச்சியும் பெருகட்டும் - பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், "அனைவர் வாழ்விலும் அமைதியும், மகிழ்ச்சியும் பெருகிடவும், நல் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும் ஆண்டாக அமைந்திடவும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார்.
புதிய நம்பிக்கையையும்,வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் - எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், “புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலருகின்ற புத்தாண்டு,மக்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையையும்,வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, அனைவருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
புத்தாண்டில் தமிழ்நாட்டில் பாசிச சிந்தனைகளுக்கு இடமளிக்காமல் முற்போக்குப் பாதையில் பயணிப்போம் - உதயநிதி ஸ்டாலின்
துணை முதல்வர் உதயநிதி வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், “பிறக்கின்ற 2025 புத்தாண்டில் அனைவரின் வாழ்விலும் புத்தொளி வீசட்டும்! கடந்த ஆண்டுகளைப் போலவே, 2025-ஆம் ஆண்டிலும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிடமாடல் அரசு, தமிழகத்தின் வளர்ச்சிக்கு அயராது பாடுபடும். 2026-இல், 7-ஆவது முறையாக ஆட்சி அமைந்திட 2025-இன் ஒவ்வொரு நாளும் உழைத்திடுவோம்.
தொடங்கும் புத்தாண்டிலும் தமிழ்நாட்டில் பாசிச சிந்தனைகளுக்கு இடமளிக்காமல் - சமூக நீதி, மத நல்லிணக்கம், சமத்துவம் என முற்போக்குப் பாதையில் பயணிப்போம் என்கிற உறுதியோடு புத்தாண்டை வரவேற்போம். அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!” என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை மீண்டும் சிறப்பானதாக்குவோம் - தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை புத்தாண்டு வாழ்த்து
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், “தமிழக மக்கள் அனைவருக்கும், தமிழக பாஜக சார்பாக, இனிய 2025 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமர் மோடி ஆட்சியில், முன்னெப்போதுமில்லாத வகையில், நம் நாடு, உலகின் முன்னோடியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளில் முதன்மையான நாடாக இருக்கிறோம். உற்பத்தி, விவசாயம், வானியல் ஆராய்ச்சி, விளையாட்டு, தொழில் வளர்ச்சி என அனைத்துத் துறைகளிலும், நமது நாடு பல மடங்கு முன்னேறியிருக்கிறது. இந்த ஆண்டு, உலக அளவில், பொருளாதாரத்தில் நான்காவது இடத்திற்கு நாம் முன்னேறவிருக்கிறோம். இவை அனைத்தும், மக்கள் நலனை நோக்கமாகக் கொண்ட, ஊழலற்ற நல்லாட்சியால் மட்டுமே சாத்தியமாகிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தை எடுத்துக் கொண்டால், செழுமை வாய்ந்த வரலாறு கொண்டது நம் தமிழகம். பல துறைகளிலும், உலகளாவிய அளவில் சாதனை படைத்தவர்கள் நம் தமிழக மக்கள். ஒவ்வொரு ஆண்டும், நம்மில் இருந்து பல சாதனையாளர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். உரிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றால், நமது இளைஞர்கள், இன்னும் பல உயரங்களை எட்டுவார்கள். நம்பிக்கையோடும், பல கனவுகளோடும், எதிர்பார்ப்புகளோடும், புத்தாண்டை எதிர்கொள்கிறோம். புதிய வாய்ப்புகளும், வழிகளும் நம் முன்னே நிறைந்திருக்கின்றன. நம்முடைய தேர்வு, நமக்கானது மட்டுமின்றி, நம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குமானது என்பதை நினைவில் கொண்டு, நல்லவற்றையே தேர்ந்தெடுப்போம். தமிழகத்தை மீண்டும் சிறப்பானதாக்குவோம்.அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!” என்று தெரிவித்துள்ளார்.
சனநாயகம் தழைக்கும் சாதனை ஆண்டாக மலரட்டும் - திருமாவளவன் புத்தாண்டு வாழ்த்துகள்
வி.சி.க தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில கூறியிருப்பதாவது: “2025-ம் ஆண்டு "சனநாயகம் தழைத்தோங்கும்" ஒரு புதிய ஆண்டாக மலரட்டும்; சாதி- மத அடிப்படையிலான வெறுப்பு அரசியலே இல்லாது ஒழியட்டும்; சமூக நல்லிணக்கமும் சகோதரத்துவமும் பெருகட்டும் என யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 2024ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்று ஒரு மாநில கட்சியாக வலுப்பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும்.
அத்தகைய அங்கீகாரத்தை எமக்கு வழங்கிய தமிழக மக்கள் யாவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்!
2024ஆம் ஆண்டு சனாதன -சாதிய, மதவாத வெறுப்பு அரசியலுக்கு எதிராக அகில இந்திய அளவில் சனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து 'இந்தியா கூட்டணியை' உருவாக்கியதும்; அதன்மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் சனாதான சக்திகளின் பெரும்பான்மை பலத்தை உடைத்திருக்கிறோம் என்பதும் கடந்த ஆண்டில் நிகழ்ந்த சிறப்புக்குரிய சாதனைகளாகும்.
அத்துடன், கடந்த ஆண்டு விசிக சார்பில் சனவரி-26 இல் "வெல்லும் சனநாயகம் மாநாடு", அக்டோபர்-2ல் "மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு" ஆகிய இரண்டு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மாநாடுகளை நடத்தினோம் என்பதும்; அவற்றின் மூலம் பரந்துபட்ட அளவில் வெகுமக்களின் நன்மதிப்பைப் பெற்று, அரசியல் களத்தில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என்பதும் குறிப்பிடத் தக்கவையாகும்.
அதே வேளையில், ஃபெஞ்சால் புயலினால், கனமழை மற்றும் வெள்ளத்தால் கடலூர், விழுப்புரம் திருவண்ணாமலை,தரும்புரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட அவலமும் நடந்தேறியது. அது வேதனைகள் நிறைந்ததாய் அமைந்தது.
மலரும் புத்தாண்டான 2025 ஆம் ஆண்டு மகிழ்ச்சி நிறைந்ததாய் அமையட்டும். சனநாயகம் தழைக்கும் சாதனை ஆண்டாய் மலரட்டும். அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்” என்று திருமாவளவன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மலரும் புத்தாண்டில் பெண்ணுரிமை, மண்ணுரிமை காப்போம் - விஜய் புத்தாண்டு வாழ்த்து
நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், “மலரும் புத்தாண்டில் பெண்ணுரிமை, மண்ணுரிமை காப்போம். உழவர்கள் தொழிலாளர்களின் நலன் காப்போம். முதியோர்கள், மாற்றுத் திறனாளிகளைப் பாதுகாப்போம். உண்மையான சமூகநீதியுடன் சமத்துவத் தமிழகம் அமைக்க உறுதி ஏற்போம். அனைவரிடமும் அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம், மனிதநேயம் செழித்து வளர இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
ஆண்டவன் சோதிப்பான் - கை விட மாட்டான் - நடிகர் ரஜினி புத்தாண்டு வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், "நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான், கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான்" என பாட்ஷா பட வசனத்தை பதிவிட்டு எக்ஸ் தளத்தில் மக்கள் அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.