பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானம்! – தலைவர்களின் கருத்து

தமிழக அமைச்சரவை பரிந்துரை மூலம் எங்கள் குடும்பங்களுக்கு விளக்கேற்றி வைத்துள்ளனர், அவர்களுக்கு மனமார்ந்த நன்றி

பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலை தீர்மானம் குறித்து தலைவர்களின் கருத்து
பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலை தீர்மானம் குறித்து தலைவர்களின் கருத்து

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முயற்சித்தார். ஆனால் இவர்களது விடுதலைக்கு பல்வேறு காரணங்கள் தடையாக இருந்தது.

இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய எவ்வித ஆட்சேபனையும் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில், இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து சட்டப்பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசே முடிவு செய்யட்டும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.

இதையடுத்து, தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி, விடுதலை செய்வது குறித்து பரிந்துரை செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

இந்நிலையில், இன்று மாலை சுமார் 4 மணியளவில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூடியது. துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த அமைச்சரவை கூட்டத்தில், பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானம் தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த பரிந்துரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் ஒப்படைக்கப்படும்.

அதன்பின்னர், ஆளுநர் இதுதொடர்பாக இறுதி முடிவு எடுக்கமுடியும் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் முடிவு குறித்து பலரும் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில், அமைச்சரவையின் இந்த தீர்மானம் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்:

திரு ராஜீவ்காந்தி அவர்களின் கொலை வழக்கில், 27 வருடங்களாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென்ற தமிழக அமைச்சரவை முடிவினை ஏற்று, அனைத்து தமிழர்களும் மகிழ்ச்சியடையும் வகையில் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக விடுதலை செய்யும் ஆணையை பிறப்பிக்க வேண்டும்!.

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர்:

காங்கிரஸ் தர்ப்பில் என்னுடைய கருத்து ஏற்கனவே கூறியது போல் மத்திய அரசு சார்பில் வாதிட்டு விடுவிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது…

தற்போது ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்ற பட்சத்தில் மத்திய அரசுக்கு சாதகமாக எடுக்க வேண்டும்.சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவானது தான். இறக்கம்,கருணை தேவை தான்… ஆனால் இவர்களை விடுவித்தால் தவறான முன்னுதாரணத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்தும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்:

7 பேரின் விடுதலை தொடர்பான தமிழக அரசின் பரிந்துரையை மனப்பூர்வமாக வரவேற்று பாராட்டுகிறேன்.

மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் கே.பாலகிருஷணன்:

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விரைவாக விடுதலை செய்ய வேண்டும்.

பேரறிவாளன் தந்தை குயில் தாசன்:

தமிழக அமைச்சரவை பரிந்துரை மூலம் எங்கள் குடும்பங்களுக்கு விளக்கேற்றி வைத்துள்ளனர், அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

தமீமுன் அன்சாரி:

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்படும் என்ற வரலாறு போற்றும் முடிவை தமிழக அமைச்சரவை எடுத்துள்ளது.

இல.கணேசன்:

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையின் பரிந்துரை தொடர்பாக தமிழக ஆளுநர் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Political leaders about tn govt decisions

Next Story
கடமை உணர்வுடன் செயல்படுகிறது அதிமுக அரசு! – மு.க.ஸ்டாலின்ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஸ்டாலின் அறிக்கை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com