Advertisment

"தமிழர்கள் வாழ்வில் இன்பம் பொங்கட்டும்": ஸ்டாலின், இ.பி.எஸ் உள்ளிட்ட தலைவர்களின் பொங்கல் வாழ்த்து

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் உலகம் எங்கும் உள்ள தமிழர்களுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Stalin EPS Pongal

இன்றைய தினம் பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் வாழ்த்துகளை பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளனர்.

Advertisment

இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், "உழவே தலை என உழுதுண்டு உலகத்தார்க்கு உண்டி கொடுக்கும் உழவர் பெருமக்களுக்கும் - உலகெங்கும் வாழும் தமிழ் உடன்பிறப்புகளுக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்!

உதயசூரியனின் ஒளியெனத் தமிழரின் உள்ளங்களில் மகிழ்ச்சி நிறையட்டும்! புதுப்பானையில் தைப்பொங்கல் பொங்குவதுபோல் வாழ்வில் இன்பம் பொங்கட்டும்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

Advertisment
Advertisement

 

தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, "உலகத் தமிழர்கள் அனைவரும் அன்பு பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், மக்கள் அனைவரும் குன்றா நலமும், குறையா வளமும், மங்கா புகழும், மாசிலா செல்வமும் பெற்று நிறை வாழ்வு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்" என பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

 

இதேபோல், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரான செல்வப்பெருந்தகை, "தமிழர்களின் பாரம்பரிய விழாவான திருவள்ளுவர் ஆண்டின் முதல் நாளில் கொண்டாடப்படும் பொங்கல் திருநாளில். தமிழ்நாட்டின் அனைத்து மக்களுக்கும் என் மனமார்ந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

இயற்கையையும். உழவுத் தொழில் செய்வோரையும் வணங்கும் இந்த விழா, வேளாண்மையின் மகத்துவத்தையும், தொழிலாளியின் பெருமையும் உணர்த்துகிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்கும் வாழ்க்கை முறையை பின்பற்றும் பொங்கல் திருநாளில், நமது உழைப்புக்குத் தக்க வெற்றியும், புகழும் கிடைக்க வேண்டும்.

இந்த இனிய பொங்கல் திருநாளில் உங்கள் வாழ்வில் செழிப்பும், மகிழ்ச்சியும் நிறைந்த நல்வாழ்வை கொண்டு வர அன்புடன் வாழ்த்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

"தமிழினத்தின் பாரம்பரிய பண்பாட்டுப் பெருவிழாவாம் பொங்கல் திருவிழாவையொட்டி உலகமெங்கும் பரவி வாழும் தமிழ்ச் சொந்தங்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர் திருநாளாய்ப் போற்றப்படும் இப்பெருநாள் சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக விளங்கும் நனிசிறந்த நன்னாளாகும். சாதி, மத அடையாளங்களைக் கடந்து அனைத்துத் தரப்பாரும் தமிழர்களாய் உணர்ந்து, ஒருங்கிணைந்து பொங்கலைக் கொண்டாடுவதற்கான சகோதரத்துவம் மலர வழிகாட்டும் உன்னத நாளாகும். 

இத்தகைய சிறப்பு வாய்ந்த இனிய பொங்கல் விழா வெறும் கொண்டாட்டத்திற்கான பண்டிகையாக மட்டும் இல்லாமல்; தமிழ்ச்சமூகத்தின் உயரிய மாண்புகளை மென்மேலும்  செழுமைப் படுத்துவதற்கான "பண்பாட்டுக் கூடலாகவும்" விளங்குகிற ஒன்றாகும்.

தமிழினத்தின் மாண்புகளில் உயரியது " யாதும் ஊரே; யாவரும் கேளிர்" என்னும் சிந்தனை முதிர்ச்சியாகும்.  அத்தகைய பக்குவம் , முதிர்ச்சி மென்மேலும் பல்கிப் பெருக வேண்டும். சாதி, மதம், மொழி, இனம் , பால் போன்ற அடையாளங்களின் பெயரால் ஒருவருக்கொருவர் வெறுப்பை உமிழ்வது, வெறுப்பு அரசியலை விதைப்பது, ஆதாயநோக்கில் அதனைப் பரப்புவது போன்றவற்றைத் தவிர்ப்பது தமிழினத்தின் மாண்புகளுக்குப் பெருமை சேர்க்கும்.  

அத்தகைய பரந்த பார்வையோடு தமிழினத்தின் தலைநிமிர்வுக்காக தன் வாழ்நாளை முழுமையாக ஒப்படைத்துக் கொண்ட மாமனிதர் தந்தை பெரியாரின் பெருவழியில், சமத்துவ இலக்கை எட்டுவதற்கு இந்நன்னாளில் உறுதியேற்போம். 

தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் நமது பாரம்பரிய பண்பாட்டு அடையாளங்களையும் அவற்றின் நீண்ட நெடிய வரலாற்றுச் சிறப்புகளையும் பாதுகாக்கும் மகத்தான பேரரண் பெரியார் என்பதை மீள் உறுதி செய்வோம்.

தன்மானத்தையும் தலைநிமிர்வையும் தமிழர்களுக்கு மீட்டளித்த தந்தை பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருவிழாவாக பொங்கல்விழாவைக் கொண்டாடுவோம்" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

 

மேலும், "தமிழகத்தை சூழ்ந்திருக்கும் இருள் அகன்று, மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டும். தை கொடுக்காததை தரணி கொடுக்காது என்பதே உண்மை. அதற்காக உழைக்க இந்த தைத்திருநாள் மற்றும் தமிழ்ப் புத்தாண்டில் தமிழர்களாகிய நாம் இயற்கையின் முன் உறுதியேற்றுக் கொள்வோம்" என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Pongal Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment