Advertisment

அண்ணா பல்கலை. மாணவிக்கு பாலியல் தொல்லை: விஜய், இ.பி.எஸ், அண்ணாமலை கடும் கண்டனம்

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vijay EPS Annamalai

சென்னை, கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

Advertisment

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், "சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே, மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அவர் மீது விரைவான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். மேலும் இக்கொடூரக் குற்றத்தில் வேறு எவரேனும் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டும்.

ஒவ்வோர் ஆண்டும் ஒதுக்கப்படும் நிர்பயா நிதியைப் பயன்படுத்தி, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத இடங்களைக் கண்டறிந்து, அங்கு ஸ்மார்ட் கம்பங்கள் அமைத்தல், அவசர கால பட்டன்கள், சிசிடிவி கேமரா, தொலைபேசி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துதல், மாநகரப் பேருந்துகள் அனைத்திலும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்தல், பொது இடங்களில் பெண்களுக்கான கழிப்பறை வசதிகள், பெண்கள் பாதுகாப்புக்கான அவசர காலத் தொலைபேசி மற்றும் கைப்பேசிச் செயலி வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி, கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

Advertisment
Advertisement

இவை அனைத்தையும் ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இவை முழுமையாகச் செயல்படுகின்றனவா என்பதையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

இவற்றைச் செய்வதில் எவ்விதச் சமரசத்திற்கும் உடன்படாமல் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். எவ்விதச் சூழலிலும் பெண்கள் மனவலிமையுடன் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்வது தொடர்பாகப் போதிய சட்ட உதவி மற்றும் உளவியல் சார்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியம்.

இந்த விழிப்புணர்வை, பெண்களுக்கு அவர்கள் கல்வி பயிலும் காலக்கட்டத்திலேயே அரசு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

மேலும், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் இச்சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள், மாணவி ஒருவருக்குப் பாலியல் தாக்குதல் நடைபெற்றிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்து விட்டது. தினமும் படுகொலைச் சம்பவங்கள், போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிப்பு, பொதுமக்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர், பெண்கள், குழந்தைகள் என யாருக்கும் பாதுகாப்பில்லாத இருண்ட காலத்தில் இருப்பது போன்ற சூழ்நிலையில் தமிழகம் தற்போது இருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. குறிப்பாக, குற்றவாளிகள் தி.மு.க-வினர் என்றால், அவர்கள் மீதான நடவடிக்கை தாமதப்படுத்தப்படுகிறது. 

மாநிலத் தலைநகரத்தின் மையப்பகுதியில், பொறியியல் கல்வி தலைமை நிறுவன வளாகத்தின் உள்ளே, பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது என்றால், சமூக விரோதிகளுக்கு, அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ எந்த பயமும் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. 

உடனடியாக, இந்தக் குற்றத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாநகர காவல்துறையும், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சரும், மாணவி மீதான பாலியல் தாக்குதலுக்கு முழு பொறுப்பேற்று, பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

இந்த விவகாரத்திற்கு, எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் , இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

தலைநகரின் மையத்தில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்திலேயே மாணவிக்கு இப்படியொரு கொடூரம் நிகழ்ந்திருப்பது வெட்கக்கேடானது.

டெல்லியில் நிர்பயா சம்பவம் நடந்து 12 ஆண்டுகள் கழித்து, அதே போன்று ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடப்பது என்பது, சட்டம் ஒழுங்கை திரு. ஸ்டாலின் பின்நோக்கி தள்ளியிருப்பதையே காட்டுகிறது.

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதை தொடர்ந்து நான் சுட்டிக்காட்டிய போதெல்லாம் அதனை எப்படி மறுப்பது என்பதில் மட்டுமே முனைப்பாக இருந்த திரு. ஸ்டாலின்-ன் மாடல் அரசு, 
எனது குற்றச்சாட்டின் தீவிரம் உணர்ந்து கொஞ்சமாவது செயல்பட்டிருந்தால், இதுபோன்ற பல சம்பவங்களை தடுத்திருக்கலாம்.

பெண்கள் படிப்பு மற்றும் பணியிடங்களில் கூட பாதுகாப்பாக இருக்க முடியாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை கெடுத்துள்ள விடியா தி.மு.க அரசுக்கு எனது கடும் கண்டனம்.

உடனடியாக குற்றவாளிகளை கைது செய்வதுடன், அவர்களுக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யுமாறும், மாநிலம் முழுவதும் பெண்கள் பாதுகாப்பிற்கான காவல் பணிகளை வலுப்படுத்துமாறும் திரு. ஸ்டாலினின் தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Anna University Sexual Harassment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment