/tamil-ie/media/media_files/uploads/2018/01/a56.jpg)
ரஜினிகாந்த் பேட்டி
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர் சார்பில் மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்றது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததையும், விரைவில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பல்வேறு போராட்டங்கள் ஏப் 1ம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரம் சூடு பிடித்த நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டியைத் தடை செய்ய வேண்டும் அல்லது தள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. தடையை மீறி ஐபிஎல் நடந்தால் சேப்பாக்கம் மைதானத்தில் போராட்டங்கள் வெடிக்கும் என்று எதிர்க்கட்சிகள் அறிவித்திருந்தனர்.
அனைத்துச் சூழல்களையும் மீறி நேற்று ஐபிஎல் நடைபெற்றது. அப்போது பல்வேறு எதிர்க்கட்சிகள் மற்றும் அமைப்பினர் உடனடியாக ஐபிஎல் விளையாட்டை நிறுத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்தப் போராட்டத்தினை கலைக்கத் தடியடி நடத்தப்பட்டது. அப்போது போலீசார் மற்றும் இளைஞர்களிடையே மோதல் நடந்த சூழ்நிலையில் இளைஞர் ஒருவர் காவல்துறையை கடுமையாகத் தாக்கினார். இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். சீருடையில் இருக்கும் காவலரை தாக்குவது வன்முறையின் உச்சம் என்றும், இதற்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்திற்கு ஒரு சில அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவும். ஒரு சிலர் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
ரஜினியின் கருத்திற்குத் தமிழிசை சௌதரராஜன், அதிமுக-வின் ஜெயகுமார் மற்றும் காந்திய மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழிசை சவுந்தரராஜன், மாநில தலைவர், பாஜக:
“ரஜினி கூறிய கருத்து வரவேற்றக்கக் கூடியது. பொதுமக்களைப் பாதிக்கும் அளவுக்கு, சட்டம் ஒழுங்கைப் பாதிக்கும் அளவிற்கு நடந்து கொள்ளும் வன்முறையாளர்களை எதிர்த்திருப்பது சரியானதே. அந்த விதத்தில் நேற்று நடைபெற்ற சம்பவத்தில் காவலர்களைத் தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயமான ஒன்று.”
ஜெயகுமார், அமைச்சர், அதிமுக:
இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயகுமார் ரஜினி கருத்து வரவேற்க வேண்டியது என்று கூறியுள்ளார். இது குறித்து அவர், “ரஜினி டிவீட் வரவேற்கத்தக்கது. எந்த நிலையிலும் வன்முறையை ஏற்கமுடியாது. அது சரியல்ல. காவிரி விவகாரத்தில் அதிமுக தரப்பில் அனைத்து முயற்சிகள் எடுத்து வருகிறோம். இந்நிலையில் நேற்று நடைபெற்ற சம்பவங்கள் கண்டிக்கப்பட வேண்டியது.” என்றார்.
தமிழருவி மணியன், தலைவர், காந்திய மக்கள் கட்சி:
“இதுவரை காவிரி போராட்டத்தில் எந்த வித வன்முறையும் நடைபெறவில்லை. ஆனால் நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. காவிரி நீருக்காக ஒரு இளைஞர் மற்றொரு இளைஞனைத் தாக்குவது எப்படி நியாயம் ஆகும். இது போன்ற செயல்கள் என்றுமே தவறு. இது தொடர்ந்தால் தமிழகம் வன்முறைக் காடாகும். இனி வரும் காலங்களில் சிறிய வன்முறை கூட நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.”
மேலும் இவர்களைப் போலவே ஒவ்வொருவராக ரஜினி கூறியுள்ள கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.