கோவை உக்கடம் பகுதியில், ஒடிசா கோர ரயில் விபத்துக்கு காரணமான பிரதமர் மோடியின் தவறான நிர்வாகத்தை கண்டித்தும், ரயில்வே அமைச்சர் பதவி விலகக்கோரியும், தந்தை பெரியார் திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, த.மு.மு.க, எஸ்.டி.பி.ஐ, திராவிட கழகம், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisment
ஒடிசாவில் நடந்த கோர ரயில் விபத்தில் 285 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த விபத்துக்கு காரணமான ரயில்வே அமைச்சர் பதவி விலகக் கோரியும், பிரதமர் மோடியின் தவறான நிர்வாகத்தை கண்டித்தும் கோவை உக்கடம் பகுதியில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர். ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேட்டியளித்த தந்தை பெரியார் திராவிட கழக பொது செயலாளர் கு.ராதாகிருஷ்ணன் கூறியதாவது;
நிர்வாக குளறுபடியே ரயில் விபத்துக்கு காரணம். இதை மறைக்கவே சி.பி.ஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்திரவிட்டுள்ளது. ஒடிசா கோர ரயில் விபத்துக்கு காரணமான ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தபட்டது.
கடந்த 9 ஆண்டுகளாக நாட்டை ஆளும் பா.ஜ.க அரசு ரயில்வே துறையினை முறையாக பராமரிக்காமல் சீரழித்துள்ளது. பாதுகாப்பு கருவிகளுக்காக லட்சக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும், கருவிகளை ரயில்களில் பொருத்த வில்லை. ரயில்வேயில் உள்ள லட்சக்கணக்கான காலியிடங்களை நிரப்ப வில்லை. ரயில்வே ஊழியர்கள் கூடுதல் நேரம் பணிபுரிய நிர்பந்திக்கபட்டுள்ளனர் என்று குற்றம்சாட்டினார்.
மேலும், இவற்றை பற்றி கவலை படாமல் 'வந்தே பாரத்' போன்ற ரயில்களை விடுவதாக சொல்லி விளம்பரம் தேடுவதிலேயே பா.ஜ.க அரசு கவனம் செலுத்தி வருகிறது எனவும் ஆர்ப்பாட்டத்தின் போது குற்றம்சாட்டினர்.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil