ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமான நிலையில், அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வாக்குப்பதிவு பிப்ரவர் 5-ஆம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான மனு தாக்கல் ஜனவரி 10-ஆம் தேதி தொடங்கி, 17-ஆம் தேதி முடிவடைகிறது.
மேலும், வேட்புமனு பரீசிலனை ஜனவரி 18-ஆம் தேதியும், வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் ஜனவரி 20-ஆம் தேதியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடவில்லை என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு பணியாற்றி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அதன்படி, "இந்தியா கூட்டணி தலைவர்களுடன் கலந்து பேசி இது தொடர்பாக முடிவு செய்வோம். இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணி பெருவெற்றி பெறும். கூட்டணிக்குள் பிரச்சனை எழாமல் தி.மு.க போட்டியிடுமா அல்லது காங்கிரஸ் போட்டியிடுமா என்பது குறித்து முடிவு செய்வோம்" எனக் கூறினார்.
தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியும் இடைத்தேர்தல் குறித்து தெரிவித்துள்ளார். "இடைத்தேர்தலில் யார் போட்டியிடுவார்கள் என்பது குறித்து கூட்டணியின் தலைவராக விளங்கக் கூடிய மு.க. ஸ்டாலின் முடிவு செய்வார். தேர்தலை சந்திக்க எங்கள் கூட்டணி தயாராக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
மேலும், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் தேர்தல் தொடர்பாக நம்மிடையே அவரது கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், "எதிர்க் கட்சியினரை பிரச்சாரத்திற்கு செல்ல விடாமல் தடுத்து, வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யும் வேலையை ஆளுங்கட்சியினர் கையாள்வார்கள். இந்த இடைத்தேர்தலிலும் தி.மு.க இதே யுக்தியை பயன்படுத்துவார்கள்" என அவர் கூறியுள்ளார்.