சென்னை, கிண்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர் பாலாஜி மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு, அரசிலர் கட்சி தலைவர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
அதன்படி, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, "தொடர்ந்து மருத்துவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவது, மருத்துவர்கள் இடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இது போன்ற குற்ற நிகழ்வுகளைத் தடுக்காமல், ஒவ்வொரு முறையும், நடவடிக்கை எடுப்போம் என்று பெயரளவில் மட்டுமே முதலமைச்சர் கூறுவது, பொதுமக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை திமுக அரசு உணர வேண்டும்" என தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதேபோல், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், "அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் அப்பாவி பொதுமக்களில் தொடங்கி மருத்துவர்கள் வரை யாருடைய உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என்பதைத் தான் இந்த நிகழ்வு காட்டுகிறது. இத்தகைய கொடுமைகள் ஒருபுறம் நடக்கும் நிலையில், தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து வருவது குரூரமான நகைச்சுவை ஆகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, "ஏற்கனவே கடந்த நவம்பர் 5ஆம் தேதி திருச்சி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அரசு மருத்துவர் முத்து கார்த்திகேயனை 6 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக செய்திகள் வந்தன. அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பது, இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு இருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது" என தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“