Advertisment

அடுத்தடுத்து சர்ச்சை; ஆக்ரோஷம்; அண்ணாமலை ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கட்சியை மீடியா வெளிச்சத்தில் வைத்துள்ளார். ஆனால், அது கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியல் மற்றும் பா.ஜ.க.,வுக்குள் அண்ணாமலை ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அடுத்தடுத்து சர்ச்சை; ஆக்ரோஷம்; அண்ணாமலை ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

Arun Janardhanan

Advertisment

Divisive & abrasive, the former cop keeping BJP in play in Tamil Nadu: தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் திறமை குறித்து கட்சிக்குள்ளும், வெளியிலும் சந்தேகம் உள்ளது. ஆனால், அண்ணாமலை தனக்கு முன் தலைவர்களாக இருந்தவர்களைப் போலல்லாமல், கடந்த சில மாதங்களாக ஊடகங்களில் கட்சியின் பார்வையை அதிகப்படுத்தியுள்ளார், இதன் விளைவு தமிழகத்தின் முதன்மை எதிர்க்கட்சியும் பா.ஜ.க.,வின் கூட்டணி கட்சியுமான அ.தி.மு.க. ”தமிழர்களுக்கு எதிரான கட்சி” மற்றும் மாநில வருவாயை “திருடுகிறது” என பா.ஜ.க.,வை குற்றம்சாட்டியது.

38 வயதான முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கடந்த ஆண்டு தமிழக பா.ஜ.க.,வின் தலைவராக நியமிக்கப்பட்டார், மேலும் ஆளும் கட்சியான தி.மு.க.,வைத் தாக்கி பேசியது, பத்திரிகையாளர்களைத் தாக்கி பேசியதன் மூலம், அவரது முரட்டுத்தனமான பேச்சு மற்றும் நிதி மோசடிகளில் சிக்கியவர்களுடன் தொடர்பு ஆகியவற்றுக்காக ஊடகங்களின் வெளிச்சத்திலேயே தொடர்ந்து இருந்து வருகிறார். ஜூன் 5 ஆம் தேதி, தி.மு.க தலைமையிலான மாநில அரசு மீதும், முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் அண்ணாமலை.

2014 ஆகஸ்டில் தமிழிசை சௌந்தரராஜன் என்ற பெண் மாநிலத் தலைவரை நியமித்தது போல, தமிழகத்தில் அவ்வளவாக செல்வாக்கு இல்லாத ஒரு தேசியக் கட்சிக்கு, அண்ணாமலையை மாநில அரசியலில் துவக்குவது ஒரு சோதனை முயற்சிதான். அண்ணாமலை கட்சியின் செல்வாக்கை அதிகரித்து இருக்கலாம், ஆனால் பலரை தவறான வழியில் சீண்டியுள்ளார். ஒரு மூத்த மாநில பா.ஜ.க தலைவர், அண்ணாமலையை "செல்வாக்கு இல்லாத தலைவர்" என்று வர்ணித்தார், அதே நேரத்தில் கட்சியின் புதிய மாநிலத் தலைமையால் ஓரங்கட்டப்பட்டதாகக் கூறும் மற்றொரு தலைவர் அண்ணாமலையின் "கதை ஒரு மடுவிலிருந்து மலையை உருவாக்குவது போன்றது" என்று கூறினார்.

"பா.ஜ.க.,வின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அரசியலுக்கு புதியவர் என்பது உண்மைதான், ஆனால் அவர் முன்பு ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி புகழ் பெற்றவர்" என்று கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார். மேலும், "ஒரு தலைவராக, அவரது பலம் மற்றும் பலவீனம் எங்களுக்குத் தெரியாது. அவர் செல்வாக்கு இல்லாத தலைவர் போன்றவர். தமிழ்நாட்டில் ஒரு தேசியக் கட்சிக்கு தலைமை தாங்குபவர் குறைந்தது பத்தாண்டு காலமாவது தொண்டர்களுடன் களத்தில் பணியாற்றியவராக இருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, அவர் அப்படி இல்லை. அவரை கர்நாடகாவில் இருந்து பி.எல்.சந்தோஷ் (பாஜக தேசிய பொதுச்செயலாளர்) அரசியலுக்கு அழைத்து வந்தார். ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது அவர் கர்நாடகாவில் தான் இருந்தார்.” என்றும் அவர் கூறினார்.

அண்ணாமலையின் செயல்பாடுகள் குறித்து அவருடன் நட்பு கொள்ளாத மற்றொரு நிர்வாகி, அண்ணாமலை கட்சிக்கு நீண்டகால தலைவராக இருக்க முடியும் என்று கூறினார். மேலும், "ஆனால் பெரும்பாலும் என்ன நடக்கிறது என்பது நிலைத்தன்மை இல்லாததுதான், கட்சியின் மாநிலத் தலைவர்கள் அடிக்கடி மாற்றப்படுகிறார்கள்," என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாட்டின் உயர்மட்ட ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்க (ஆர்எஸ்எஸ்) தலைவர் ஒருவர், வட மாநிலங்களில் உள்ள கட்சி அலகுகளை விட தமிழக பா.ஜ.க பிராமணீயமானது என்றும், அண்ணாமலையின் செயல்பாடு மற்றும் சொந்தமாகச் செயல்படும் பாணி ஏற்கனவே கட்சியில் உள் பிளவை உருவாக்கியுள்ளது என்றும் கூறினார். அண்ணாமலை மேற்கு தமிழ்நாட்டின் சக்திவாய்ந்த கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர், மேலும் அவர் 2021 சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றாலும், மேற்கு மண்டலத்தில் கட்சிக்கு இரண்டு இடங்களைப் பெற உதவினார். இது கட்சிப் படிநிலையில் அவரது விரைவான உயர்வுக்கு உதவியது.

"தமிழிசை யாருடனும் மோதலில் ஈடுபடவில்லை, அவர் ஒரு அனுபவமிக்க அரசியல்வாதி, அவர் அனைவருடனும் பேசுவார்," என்று அவர் கூறினார். மேலும், “எல் முருகன் (முன்னாள் மாநிலத் தலைவர்) கடின உழைப்பாளி, ஆனால் அவர் மாநிலத் தலைமை நிலைக்கு வரத் தவறிவிட்டார். அண்ணாமலை நிலை வேறு. தி.மு.க.,வுக்கு எதிராக, எதிர்க்கட்சியாக இருப்பது, தற்போது அவருக்கு சாதகமாக உள்ளது. அவரது புதிய மனமும் ஆர்வமும் அவரை உற்சாகமடையச் செய்யும் அதே வேளையில், பிரச்சினைகள் பற்றிய அவரது அறியாமை மற்றும் முதிர்ச்சியற்ற நடத்தை ஆகியவை கடுமையான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஊடகவியலாளர்களைப் பற்றி அவர் வகுப்புவாதக் கருத்துக்களைத் தெரிவித்தது, மூத்த பத்திரிக்கையாளர்களை அவர்கள் கோயில்களுக்கோ அல்லது தேவாலயங்களுக்கோ செல்கிறீர்களா என்று கேட்பது, அவர்களது மனைவிகளின் மதத்தைப் பற்றி விசாரிப்பது போன்ற பிரச்சனைகளை நாங்கள் சமாளிக்க வேண்டியிருந்தது. கட்சிக்கு உள்ளேயோ, வெளியில் இருந்தோ அவர் இப்படிச் செயல்பட முடியாது. குறிப்பாக, கட்சியில் உள்ள வலுவான பிராமண லாபி மற்றும் ஆர்.எஸ்.எஸ், இதுபோன்ற அலட்சியம் அல்லது ஆணவத் தொனியைப் பொறுத்துக் கொள்ளாது.” என்றும் அவர் கூறினார்.

அதிகாரத்தை வித்தியாசமாக பார்க்கும் சமூகத்தில் கட்சியை இணைக்கும் முயற்சியின் விளைவாக அண்ணாமலையின் நியமனம் உள்ளது என்று சிலர் பார்க்கிறார்கள். “ஐ.பி.எஸ் அல்லது ஐ.ஐ.டி (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி) அல்லது வெளிநாட்டு பல்கலைக்கழக படிப்பு போன்ற தகுதிகள் மூலம், ​​சுயவிவரத்தில் பிரமிப்பை ஏற்படுத்துகிறீர்கள்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை அறிந்த கர்நாடகத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் கூறினார். மேலும், “அவர் ஐ.பி.எஸ் சேவையில் ஊழலோ அல்லது ஒழுக்கக்கேடானவராகவோ இருக்கவில்லை. ஆனால் அதிகாரத்திற்கான அந்த சமூக அணுகுமுறையின் பலியாகவே நாம் அவரைப் பார்க்கிறோம். அவர் கட்சிக்கு தேவையானவற்றை வழங்கத் தவறினால் பா.ஜ.க.,வால் உடனடியாக நீக்கப்படலாம். அவர் ஐ.பி.எஸ் சேவையில் தொடர்ந்திருந்தால் மக்களுக்கு இன்னும் பலவற்றை செய்திருக்க முடியும்” என்றும் அந்த அதிகாரி கூறினார்.

சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் அரசியல் அறிவியல் பேராசிரியர் ராமு மணிவண்ணன், ”அண்ணாமலை ஒரு அரசியல்வாதியாக ஊடகங்களுடனேயே தொடர்பு வைத்திருந்தார், மக்களுடன் அல்ல. ஊடகங்களை நாம் சரியாக நிர்வகிப்பதன் மூலம் மக்களை நிர்வகிக்க முடியும் என்ற இந்தச் சுவாரசியமான நம்பிக்கை இன்றைய நாட்களில் அரசியலில் பலரிடம் காணப்படுகிறது. ஆனால் மக்களை ஊடகங்கள் என்று தவறாக நினைப்பது முட்டாள்தனமாக இருக்கும். அண்ணாமலையை மதிப்பு வாய்ந்த பொருளாக மாற்றுவது அவருடைய ஐ.பி.எஸ் டேக், வயது மற்றும் கட்சியில் திடீர் உயர்வு ஆகியவற்றின் சுவாரஸ்யமான கலவையாகும். இந்த செயல்பாட்டில் அண்ணாமலையும் ஊடகமும் பரஸ்பரம் பயனடைகின்றன. காரணம் இல்லாமல் வெளித்தோற்றத்தில் பிரபலமாக இருக்கும் பலரை நாம் சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. அவர்கள் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதில்லை அல்லது புதிய சிந்தனைகளைக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் தகவலில் வளர்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, தகவல்களைத் திணிப்பது அரசியல் அல்ல. ஒரு தெளிவான கண்ணோட்டம் இருப்பதே அரசியல்” என்று கூறினார்.

இதையும் படியுங்கள்: தமிழகத்தில் 8 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

மேலும் அண்ணாமலையின் ஐ.பி.எஸ் டேக்-ஐ அடிப்படையாக வைத்து அண்ணாமலைக்கு அசாதாரணமான திறமை இருப்பதாகக் கூறுவது மக்களை முட்டாளாக்கும் செயல் என்றும், “தமிழகத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருவது அண்ணாமலை அல்ல, அனைத்து அரசு இயந்திரங்களையும் கொண்டு செயல்பட்டு வரும் மத்தியில் ஆளும் பா.ஜ.க தான்” என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தைச் சேர்ந்த பாஜக-ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் ஒருவர், பல மாநிலத் தலைவர்கள் வந்து செல்வதை கட்சி பார்த்திருப்பதாகவும், அந்தப் பதவியில் யாரும் இரண்டு முறைதான் இருக்கலாம் என்றும் கூறினார். மேலும், "அவ்வளவு தான். உண்மையில், தலைவர் என்பது கட்சிக்கு மிக முக்கியமான விஷயம் அல்ல. எனவே, அண்ணாமலை பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. ஆனால் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, குறிப்பாக CAA (குடியுரிமை திருத்தச் சட்டம்) சார்பு மற்றும் எதிர்ப்பு பிரச்சாரங்கள் இங்கு நடந்தபோது, ​​​​தமிழகத்தில் தேசியவாத அரசியலுக்கு ஆதரவாக ஒரு குறிப்பிடத்தக்க போக்கைக் காணத் தொடங்கினோம். சிறிய நகரங்களில் நடத்தப்பட்ட CAA ஆதரவுக் கூட்டங்களில் சராசரியாக 4,000 பேர் கலந்துகொண்டனர். சமீபத்தில் சிவகங்கையில் நடந்த பேரணியில் கூட 8,000 பேர் கலந்து கொண்டனர். அண்ணாமலை இவை எல்லாவற்றின் முகமாக இருக்கிறார், அதைத் தாண்டி வேறு எதுவும் இல்லை, ”என்றும் அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Bjp Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment